மும்பையில் 2-வது நாளாக பெஸ்ட் டிரைவர்கள் வேலை நிறுத்தம்; பஸ் சேவை பாதிப்பு

மும்பையில் 2-வது நாளாக பெஸ்ட் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் சேவை பாதித்து பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2023-08-03 22:45 GMT

தனியார் ஒப்பந்த டிரைவர்கள்

மும்பையில் மாநகராட்சியின் பெஸ்ட் நிறுவனம் சார்பில் 3 ஆயிரத்து 100 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினந்தோறும் 30 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பெஸ்ட் பஸ்களில் பயணம் செய்கின்றனர். பெஸ்ட் பஸ்கள் மும்பை மட்டுமின்றி மும்பையில் இருந்து தானே, நவிமும்பை, மிராபயந்தர் போன்ற பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. தனியாருக்கு சொந்தமான பஸ்களும் ஒப்பந்த அடிப்படையில் பெஸ்ட் நிறுவனத்துக்காக இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்களுக்கான எரிபொருள், பராமரிப்பு செலவு, டிரைவர் சம்பளம் ஆகியவற்றை ஒப்பந்ததாரர் தான் பார்த்து கொள்ள வேண்டும்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊதிய ஊயர்வு கேட்டு தனியார் ஒப்பந்த பஸ் டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்கோபர், முல்லுண்டு டெப்போவை சேர்ந்த டிரைவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் ஒப்பந்த பஸ் டிரைவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஊதியம் அதிகரிக்கப்படவில்லை என வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

2-வது நாளாக நடந்தது

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாகவும் தனியார் ஒப்பந்த பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று போராட்டத்தில் 3 தனியார் ஒப்பந்த நிறுவனங்களை சேர்ந்த டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 12 டெப்போக்களில் 1009 பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே பஸ் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதி அடைந்தனர். குறிப்பாக காட்கோபர், முல்லுண்டு, சிவாஜிநகர், ஒர்லி உள்ளிட்ட டெப்போக்களில் இருந்து இயக்கப்பட்ட சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

காட்கோபர் உள்ளிட்ட இடங்களில் பஸ்சுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்து இருந்தனர். குறைவாக இயக்கப்பட்ட பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தனியார் ஒப்பந்த பஸ் டிரைவர்கள் பிரச்சினையில் அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்