ஏற்கெனவே விபத்து ஏற்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்த இடத்தில் வேகமாக வந்த கார் மோதி மீண்டும் விபத்து - 5 பேர் பலி
மும்பையில் நேற்று இரவு விபத்து நடந்த இடத்தில் இன்று அதிகாலையில் வேகமாக வந்த கார் ஒன்று மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் பாந்த்ரா-வொர்லி சீ லிங்க் பகுதியில் நேற்று இரவு விபத்து நடந்த இடத்தில் இன்று அதிகாலையில் வேகமாக வந்த கார் ஒன்று மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் வேகமாக வந்த கார் ஒன்று நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மற்றும் அருகில் இருந்த கார்களில் மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து பாந்த்ராவில் இருந்து வொர்லி செல்லும் சாலையை அதிகாரிகள் மூடினர்.
இந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் சீ லிங்க் ஊழியர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதில் சிகிச்சையின் போது 5 பேர் உயிரிழந்ததாகவும் காயமடைந்த 6 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய இருவர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர். இந்த விபத்தில் பல வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மும்பையில் உள்ள பாந்த்ரா-வொர்லி சீ லிங்க் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிர்களை இழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.