மந்திரி எம்.டி.பி.நாகராஜை அழைத்து பேசுவேன்; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா சொல்கிறார்
போலீஸ் பணியில் சேர ரூ.௮௦ லட்சம் லஞ்சம் கொடுக்கப்படுவதாக கருத்து தெரிவித்த மந்திரி எம்.டி.பி.நாகராஜை அழைத்து நான் பேசுவேன் என்று மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று மநதிரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தீஸ் மரணம் அடைந்த விவகாரத்தில், மந்திரி எம்.டி.பி.நாகராஜ் ரூ.80 லட்சம் லஞ்சம் கொடுத்து பணிக்கு சேர்ந்ததாக கூறி இருப்பது பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எம்.டி.பி.நாகராஜ் எந்த நேரத்தில், எப்போது அந்த கருத்தை தெரிவித்தார் என்பது தெரியவில்லை. தற்போது அவர் வெளிமாவட்ட சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். இதுபற்றி அவரே தகுந்த விளக்கம் அளிப்பார். அதே நேரத்தில் என்னை சந்தித்து பேசும்படி எம்.டி.பி.நாகராஜிடம் தெரிவித்துள்ளேன். அதன்படி, இந்த விவகாரம் குறித்து எம்.டி.பி.நாகராஜை அழைத்து பேசுவேன். நான் போலீஸ் மந்திரியாக பதவி ஏற்ற பின்பு, ஒவ்வொரு விஷயத்திலும் நேர்மையுடனும், மிகுந்த கவனத்துடனும் செயல்பட்டு வருகிறேன். போலீஸ் அதிகாரிகள் பணி இடமாற்றத்திலும் கூட தவறு நடந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். எந்த ஒரு விவகாரத்தையும் முழுமையாக விசாரிக்காமல் பதில் அளிக்க முடியாது. இதுபற்றிய தகவல்களை பெற்று விட்டும், மந்திரி எம்.டி.பி.நாகராஜை அழைத்து பேசிய பின்பும், இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசுகிறேன்.
இவ்வாறு மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.