கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆய்வு

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-07-29 20:50 GMT

21 எம்.பி.க்கள் குழு

மணிப்பூரில் கடந்த மே 3-ந்தேதி வெடித்த கலவரம் எல்லையின்றி தொடர்கிறது. அங்குள்ள மெய்தி, குகி இன பிரிவினருக்கு இடையே நடந்து வரும் இந்த வன்முறை சம்பவங்களில் 160-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கும் இந்த கலவரம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. அதன்படி காங்கிரஸ், திரிணாமுல் கங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 21 எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் 2 நாள் பயணமாக நேற்று சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றனர்.

இந்த குழுவில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய் (காங்கிரஸ்), சுஷ்மிதா தேவ் (திரிணாமுல் காங்கிரஸ்), கனிமொழி (தி.மு.க.), மனோஜ் குமார் ஜா (ராஷ்ட்ரீய ஜனதாதளம்), சந்தோஷ் குமார் (இந்திய கம்யூனிஸ்டு), ரகிம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) உள்ளிட்ட எம்.பி.க்கள் இடம் பெற்றிருந்தனர்.

நிவாரண முகாம்களுக்கு சென்றனர்

இம்பால் சென்ற எம்.பி.க்கள் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சூரச்சந்த்பூர் மாவட்டத்துக்கு சென்றனர். அங்கு கலவரத்தில் பாதிக்கப்பட்ட குகி இன மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாம்களை அவர்கள் பார்வையிட்டனர். இதில் காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான ஒரு குழுவினர் சூரச்சந்த்பூர் கல்லூரி மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை பார்வையிட்டனர்.

துணைத்தலைவர் கவுரவ் கோகாய் உள்ளிட்டோர் அடங்கிய மற்றொரு குழுவினர் சூரச்சந்த்பூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை ஆய்வு செய்தனர். மேலும் இந்த 2 குழுவினரும் பிஸ்னுபூர், இம்பால் மேற்கு, கிழக்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு முகாம்களையும் ஆய்வு செய்தனர். அத்துடன் கலவர பாதிப்பின் எச்சங்களாக காட்சியளிக்கும் இடங்களையும் அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

அமைதி ஏற்படுத்த விருப்பம்

பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், 'இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவும், பிரச்சினையை புரிந்து கொள்வதற்காகவும் இங்கே வந்திருக்கிறோம். வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து, விரைவாக அமைதியை ஏற்படுத்த விரும்புகிறோம். மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக்கொண்டிருக்கிறது' என்றார். இந்த கலவரம் மணிப்பூர் மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவின் பிம்பத்தையே சேதப்படுத்தி விட்டதாக தெரிவித்த அவர், நாம் அனைவரும் அமைதியான தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் எனவும் கூறினார். அதேநேரம் அரசியல் செய்ய இங்கு வரவில்லை என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார். மணிப்பூர் பிரச்சினையில் தேசிய ஜனநாயக கூட்டணி முற்றிலும் காணாமல் போய்விட்டதாக கூறிய கவுரவ் கோகாய், ஆனால் 'இந்தியா' கூட்டணி இருப்பதாகவும், மணிப்பூர் மக்களுடன் இந்தியா எப்போதும் இருக்கும் என்றும் கூறினார்.

கனிமொழி எம்.பி.

கனிமொழி எம்.பி. கூறும்போது, 'மணிப்பூர் மக்கள் துயரத்தில் உள்ளனர். மத்திய அரசு அவர்களின் பிரச்சினையை தீர்க்க தவறிவிட்டது. நிவாரண முகாம்களுக்குச் சென்றபோது கிடைத்த முடிவுகளைக் கொண்டு, நாளை (இன்று) காலை கவர்னரை சந்தித்து பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்போம். இங்கே நாங்கள் நடத்திய ஆய்வில் தெரிந்து கொண்டவற்றின் அடிப்படையில் எதிர்கால உத்திகளை முடிவு செய்வோம்' என்று கூறினார்.

ராஷ்ட்ரீய ஜனதாதள எம்.பி. மனோஜ் குமார் ஜா, 'இந்த அழகான மாநில மக்கள் கடந்த 3 மாதங்களாக பாதிக்கப்பட்டு உளளனர். ஆனால் எதிர்க்கட்சிகளை தவிர, அரசு தரப்பில் இருந்து யாரும் அவர்களது கூக்குரலை கேட்கவில்லை. இன்று நாங்கள் எதுவும் கூற வரவில்லை, மாறாக அவர்களது துயரை கேட்க வந்திருக்கிறோம். அவர்களது வலியை உணர்ந்து வந்திருக்கிறோம்' என்று தெரிவித்தார்.

கவர்னருடன் இன்று சந்திப்பு

மேலும் இந்த குழுவில் இடம் பெற்றிருந்த பல எம்.பி.க்களும் மத்திய அரசை குறை கூறினார்கள்.எதிர்க்கட்சிகளை சேர்ந்த இந்த எம்.பி.க்கள் குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநில கவர்னர் அனுசுயாவை சந்திக்க உள்ளனர். அப்போது மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்தும், அமைதி நடவடிக்கைகள் குறித்தும் விவாதிப்பார்கள் என கூறப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து பிற்பகலில் அவர்கள் டெல்லி திரும்புகிறார்கள்.

எம்.பி.க்களிடம் பெண் கதறல்

மணிப்பூரில் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட பெண்களில் ஒருவரின் தாயை திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. சுஷிமிதா தேவ் மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் சந்தித்தனர். அப்போது, கலவரத்தில் தனது கணவர் மற்றும் மகன் இருவரும் கொல்லப்பட்டதாக அந்த பெண் கூறினார். அவர்களின் உடல்களை இதுவரை தரவில்லை எனக்கூறிய அந்த பெண், அவர்களின் உடல்களையாவது பார்க்க உதவுங்கள் என கண்ணீர் விட்டு கதறினார்.

இதைக்கேட்ட எம்.பி.க்கள் இருவரும் கலங்கிப்போயினர்.

இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மிதா தேவ் எம்.பி., 'அவரது மகள் கற்பழிக்கப்பட்டு உள்ளார். கணவர் மற்றும் மகன் இருவரும் போலீசார் முன்னிலையில் கொல்லப்பட்டு உள்ளனர். ஆனால் இதுவரை ஒருவரை கூட பணியிடை நீக்கம் செய்யவில்லை' என குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்