வேறு சமூகத்தினர் பள்ளிக்கு செல்லக்கூடாது; 16 வயது சிறுமி தடுத்து நிறுத்தம், குடும்பத்தினர் மீது தாக்குதல்
வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் 16 வயது சிறுமியை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்தது மட்டுமல்லாமல் சிறுமியில் குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் ஷஜபூர் மாவட்டம் பவாலியஹெடி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி பட்டியலின சமூகத்தை சேர்ந்தவராவார்.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை இந்த சிறுமி தனது கிராமத்திற்கு அருகே உள்ள பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர் அந்த சிறுமியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும், வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என கூறி அந்த சிறுமியின் புத்தக பையை பறித்துக்கொண்டனர். இந்த கிராமத்தை சேர்ந்த மற்ற சிறுமிகள் யாரும் பள்ளிக்கூடம் செல்லவில்லை நீயும் செல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர்.
புத்தகபையை பறித்துக்கொண்டு, பள்ளிக்கு செல்லக்கூடாது என மிரட்டிய கும்பல் குறித்து அந்த சிறுமி தனது வீட்டில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் சகோதரன், மற்றும் குடும்பத்தினர் இது குறித்து அந்த கும்பலிடம் தட்டிக்கேட்டுள்ளனர்.
அப்போது, அந்த கும்பல் சிறுமியின் சகோதரன் மற்றும் குடும்பத்தினர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்த கும்பல் சிறுமியின் குடும்பத்தினர் மீது சரமாரி தாக்குதல் நடத்தியது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சிறுமியை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்து, சிறுமியில் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.