தம்பியின் உடலுடன் சாலையோரம் காத்திருந்த சிறுவன்: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
மத்திய பிரதேச மாநிலத்தின் சுகாதாரத்துறை நிலைமையை இந்த நெஞ்சை உருக்கும் காட்சிகள் பிரதிபலிக்கின்றன என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
போபால்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் எட்டு வயது சிறுவன் உயிரிழந்த தனது 2 வயது சகோதரரின் உடலை மடியில் வைத்து ஆம்புலன்ஸ்சுக்காக காத்திருந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 450 கிமீ தூரத்தில் உள்ளது மொரோனா மாவட்டம். இங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் அம்பா என்ற பகுதியைச் சேர்ந்த பூஜாராம் என்பவர் தனது 2 வயது மகனை சிகிச்சைக்காக கொண்டுவந்துள்ளார். 2 வயது சிறுவனுக்கு நுரையீரல் தொடர்பாக நோய் இருந்துள்ளது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அந்த சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்ய முயற்சித்துள்ளார். இவரின் கிராமம் மருத்துவமனையில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. ஆனால், மருத்துவமனை தரப்பு பூஜாராமிடம் இலவச ஆம்புலன்ஸ் சேவை தற்போதைக்கு இல்லை என கைவிரித்துள்ளது. தனியார் ஆம்புலன்ஸ்சை ஏற்பாடு செய்யும் அளவிற்கு பூஜா ராமிற்கு வசதி இல்லாததால், தனது மற்றொரு மகனான குல்ஷானிடம் இரண்டு வயது மகனின் உடலை ஒப்படைத்து விட்டு மாற்று ஏற்பாடுக்காக சென்றுள்ளார்.
தனது இரண்டு வயது தம்பியின் உடலை மடியில் வைத்துக்கொண்டே 8 வயது சிறுவன் குல்ஷான் தந்தையின் வருகையை எதிர்பார்த்து அரை மணிநேரத்திற்கும் மேலாக பொதுவெளியில் அமர்ந்துள்ளார். இந்த காட்சி காண்போரின் நெஞ்சை உலுக்கியுள்ளது.
இந்நிலையில், இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி யோகந்திரா சிங் உடலை பூஜாராம்மின் சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்சை ஏற்பாடு செய்து உதவியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி மத்திய, மாநில பாஜக அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பதிவில். மத்திய பிரதேச மாநிலத்தின் சுகாதாரத்துறை நிலைமையை இந்த நெஞ்சை உருக்கும் காட்சிகள் பிரதிபலிக்கின்றன. இது தான் பிரதமர் மோடியின் நல்லாட்சியின் உண்மை முகம் எனக் கூறி விமர்சித்துள்ளது.
இது குறித்து மத்தியப் பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஷ்ரா கூறுகையில், ஆம்புலன்ஸ் மறுக்கப்படவில்லை. வீடியோ குறித்து வெளியான தகவல் உண்மையில்லை. கிராமத்திலிருந்து தினக்கூலி தொழிலாளி ஒருவர் தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து வந்த போதே உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. மருத்துவமனையில் சிறுவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறினர். அவர் சிறுவனின் உடலை மற்றொரு மகனிடம் கொடுத்துவிட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றபோதுதான் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறி உள்ளார்.