மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; 3 வாலிபர்கள் சாவு
தாவணகெரேயில் மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்தனர். அவர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த பரிதாபம் சம்பவம் நடந்துள்ளது.
சிக்கமகளூரு:-
மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்
தாவணகெரே டவுன் ராம்நபர் பகுதியை சேர்ந்தவர்கள் பரசுராம் (வயது 21), சந்தோஷ் (23), சிவக்குமார் (26). நண்பர்களான இவர்கள் 3 பேரும் கட்டிகேனஹள்ளி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றனர். திருவிழாவை பார்த்து ரசித்துவிட்டு 3 பேரும் ஒரே ேமாட்டார் சைக்கிளில் தாவணகெரே நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் தாவணகெரே அருகே வந்தபோது, எதிரே வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
3 பேர் சாவு
இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள், 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வேகமாக வந்ததால் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதுகுறித்து தாவணகெரே டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.