போக்குவரத்து போலீசாரிடம் சிக்காமல் தப்பி சென்றபோது மோட்டார் சைக்கிள் - கேரள அரசு பஸ் மோதல்; 2 பேர் பலி

மைசூரு அருகே போக்குவரத்து போலீசாரிடம் சிக்காமல் அவர்களிடம் இருந்து தப்பி சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது கேரள அரசு பஸ் மோதியது. இதில் 2 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-05-21 22:20 GMT

மைசூரு: மைசூரு அருகே போக்குவரத்து போலீசாரிடம் சிக்காமல் அவர்களிடம் இருந்து தப்பி சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது கேரள அரசு பஸ் மோதியது. இதில் 2 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

போலீசாரிடம் சிக்காமல் இருக்க...

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா உனசவாளு கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி(வயது 25). அதே தாலுகா கூடலாபுரா பகுதியை சேர்ந்தவர் சச்சின்(24), கல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு(24). இவர்கள் 3 பேரும் கடகோலா கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். தினமும் ஒரே மோட்டார் சைக்கிளிலில்தான் வீட்டிற்கு சென்று வந்தனர்.

அதேபோன்று நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் வேலை முடிந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மைசூரு புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். இதை பார்த்த 3 பேரும் போலீசாரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, வேகமாக மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளனர்.

2 பேர் சாவு

இவர்களை போலீசார் பிடிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிவேகத்தில் சென்ற அவர்கள் எதிரே வந்த கேரள அரசு பஸ் மோதினர். இதில் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டத்தில், தலை, கை, கால் பகுதியில் பலத்த காயம் அடைந்தனர். இதில் துரைசாமி, சச்சின் ஆகிய 2 பேர் பலியானார்கள். ரகு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து மைசூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்