பிறந்த 1 மணி நேரத்தில் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய் கைது - குடும்ப வறுமையால் விபரீதம்

இடுக்கி அருகே பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-14 02:33 GMT

கேரளா:

இடுக்கி மாவட்டம் தொடுபுழா அடுத்துள்ள உடுமண்ணூர் முக்குளி கிராமத்தை சேர்ந்தவர் சதீசன். இவரது மனைவி சுஜிதா (வயது 26). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுஜிதா 3-வது முறையாக கர்ப்பமானார். இதை கணவருக்கு தெரியாமல் மறைத்து வந்தார்.

இதற்கிடையே வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் கேட்டபோது உடல் பருமன் கூடிவிட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் சுஜிதா ரத்த அழுத்தம் அதிகமாகி திடீரென வீட்டில் மயங்கி விழுந்து விட்டார்.

இதையடுத்து சதீசன் அவரை சிகிச்சைக்காக தொடுபுழா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பிரசவமானது தெரியவந்தது. பின்னர் டாக்டர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது தனக்கு குழந்தை பிறந்ததாகவும், குடும்ப வறுமையின் காரணமாக அதனை குளியல் அறையில் உள்ள தண்ணீர் வாளியில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும் கூறினார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் தொடுபுழா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தண்ணீர் வாளியில் இருந்த ஆண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஜிதாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்