ஜி-20 மாநாட்டை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட ரெயில்களின் சேவைகள் மாற்றம் - வடக்கு ரெயில்வே அறிவிப்பு
பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரெயில்களின் சேவைகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நடப்பு ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில், வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதில் 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதனால் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் உள்பட அனைத்து பாதுகாப்பு முகமைகளும் இணைந்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இந்த நிலையில் வடக்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜி-20 உச்சி மாநாட்டிற்கான பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக செப்டம்பர் 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 300-க்கும் மேற்பட்ட ரெயில்களின் சேவைகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 207 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 15 ரெயில்கள் சென்று சேரும் இடம் மாற்றப்பட்டுள்ளதாகவும், 6 ரெயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக 70 ரெயில்கள் கூடுதலாக சில நிறுத்தங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 36 ரெயில்களின் புறப்படும் இடம் மற்றும் சென்று சேரும் இடம் மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களில் ரெயில்களில் பயணம் செய்ய இருப்பவர்கள், தங்கள் ரெயில்களின் நேரம் மற்றும் வழித்தடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என வடக்கு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.