கொரோனா தொற்றை விட இணைநோய்களால் மரணங்கள் அதிகம்: நிபுணர்கள் தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த போதிலும், அதிகளவில் லேசான அறிகுறிகளே காணப்படுகின்றன என நிபுணர்கள் இன்று கூறியுள்ளனர்.

Update: 2022-08-04 11:08 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் 4 நாட்களாக சரிவை சந்தித்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று மீண்டும் 17 ஆயிரம் எண்ணிக்கையை கடந்தது. இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 19,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தொடர்ந்து நாட்டில் கொரோனா தொற்று உயர்ந்து அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதேபோன்று, தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த போதிலும், லேசான அறிகுறிகளே அதிகளவில் காணப்படுகின்றன என நிபுணர்கள் இன்று கூறியுள்ளனர்.

இதுபற்றி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர் நிகில் மோடி கூறும்போது, நிச்சயம் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. டெல்லியில் கூட நேற்று 2 ஆயிரத்திற்கும் கூடுதலான பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. ஆனால், லேசான அறிகுறிகளே காணப்படுகின்றன என கூறியுள்ளார்.

80 முதல் 90 வயது வரையிலான நோயாளிகள் நீரிழிவு உள்ளிட்ட பிற பாதிப்புகளுடன் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் லேசான கொரோனா அறிகுறிகளே உள்ளன என கூறியுள்ளார்.

டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த மருத்துவரான திரேன் குப்தா கூறும்போது, சரியான நேரத்தில் பரிசோதனை செய்து கொள்ளாதவர்கள் மற்றும் கொரோனா விதிகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் பிரச்சனையில் சிக்குகின்றனர் என கூறியுள்ளார்.

பொறுப்பற்ற முறையில் மக்கள் நடந்து கொள்வது மற்றும் முக கவசங்களை அணியாதது ஆகியவை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணங்களாகும். பருவகாலத்தில் ஏற்படுகிற மாற்றங்களும் கூட ஒரு காரணம் என அவர் கூறியுள்ளார்.

ஒரு சில மரணங்களும் ஏற்படுகின்றன. அவர்களில் பலர் கொரோனா தொற்றை விட இணை நோய்களாலேயே உயிரிழக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு இன்னும் முடிந்து விடவில்லை என கூறிய அவர், 3 மாதங்களுக்கு முன் தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு கூட மீண்டும் பாதிப்பு ஏற்படுகிறது என எச்சரிக்கை விடுத்து உள்ளார். சில பன்றி காய்ச்சல் நோயாளிகளும் கூட சிகிச்சைக்கு வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்