தொங்கு பால விபத்தில் 135 பேர் பலியான சம்பவம்: விசாரணை குழு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

குஜராத்தின் மோர்பி தொங்குபால விபத்துக்கு செல்லரித்த கம்பிகளும், தரமற்ற கம்பி இணைப்புகளும் இருந்ததே காரணம் என்று விசாரணை குழு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Update: 2023-02-20 23:28 GMT

கோப்புப்படம்

மோர்பி,

குஜராத்தின் மோர்பி நகரில் கடந்த ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி புகழ்பெற்ற தொங்குபாலம் அறுந்து ஆற்றில் விழுந்ததில் 135 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மோர்பி பால விபத்து தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

விபத்து குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரி, முதுநிலை என்ஜினீயரிங் அதிகாரி உள்ளிட்டவர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சமீபத்தில் ஆய்வு செய்து, விசாரணை அறிக்கையை மோர்பி நகராட்சியிடம் சமர்ப்பித்துள்ளது.

அதில் விபத்துக்கு காரணமான பல்வேறு விவரங்கள் விவரிக்கப்பட்டு உள்ளன. அவை வருமாறு:-

செல்லரித்த கம்பிகள்

* ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1887-ல் மச்சு ஆற்றில் கட்டப்பட்ட இந்த தொங்குபாலம், 2 தடித்த கம்பி வயர்களால் கட்டப்பட்டிருந்தது. இதில் பாதிக்கு மேல் 2022 அக்டோபர் 30-ந் தேதிக்கு முன்பே செல்லரித்து உடைந்து இருந்துள்ளன.

* இதில் பாலத்தின் மேற்புறம் உள்ள கேபிள் அறுந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டு உள்ளது.

* செல்லரித்த கம்பிகளை மாற்றாமலும், தொங்கு வயர்களை பாதி பழைய வயர்களுடன் இணைத்து வெல்டிங் செய்து பயன்படுத்தியதாலும் பாலத்தின் உறுதித்திறன் குறைவாக இருந்துள்ளது.

* பாலத்தை பழுதுபார்க்கும் ஒப்பந்தத்தில் ஈடுபட்ட அஜந்தா மேனுபக்சரிங் நிறுவனம் (ஒரேவா குழுமம்) சரிவர பழுது பார்க்காதது விபத்துக்கு காரணம்.

அறுந்த கம்பிகள்

* பாலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு கேபிளும், 7 இழை கம்பிகள் சேர்த்து முறுக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். அப்படி இணைக்கப்பட்ட மொத்தம் 49 வயர்களை கொண்டு இந்த பாலம் உருவாக்கப்பட்டிருந்தது. இவற்றில் 22 வயர்கள் ஏற்கனவே செல்லரித்து இருந்துள்ளது. மேலும் 27 வயர்கள் சமீபத்தில் அறுந்துள்ளன.

* மேலும் பழுதுபார்க்கும் பணியின்போது, பழைய தொங்கு கேபிள்கள் பெரும்பாலும் மாற்றப்படாமல், புதிய தொங்கு கேபிள்கள் பலவற்றுடன் வெல்டிங் செய்து இணைக்கப்பட்டு உள்ளன.

மரப்பலகைக்கு பதில் அலுமினியம்

* மேலும் நடக்கும் பகுதியில் நெகிழ்வு தன்மை கொண்ட மரப்பலகைகளுக்கு பதிலாக, திடமான அலுமினிய பட்டைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அவை இடைவெளி இல்லாமல் இணைக்கப்பட்டு இருந்தன. இது நெகிழ்வுத் தன்மையற்ற நிலையை உருவாக்கியது. மேலும் பாலத்தின் எடையையும் அதிகமாக்கியது.

* மோர்பி நகராட்சி மற்றும் பொதுக்குழுவின் அனுமதியின்றி, பாலத்தை பராமரிக்கவும், இயக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பராமரிப்பு பணிக்கு பின்பு, உறுதித்தன்மை பற்றிய ஆய்வு ஏதும் செய்யப்படாமலேயே திறப்பு விழாவும் நடத்தப்பட்டது.

ஒப்பந்ததாரர்களின் இதுபோன்ற தவறுகளே விபத்துக்கு காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்