மூடிகெரே எத்தினபுஜா மலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

மூடிகெரே எத்தினபுஜா மலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-03 18:45 GMT

சிக்கமகளூரு-

மலைநாடு மாவட்டமான சிக்கமகளூருவில் அதிக சுற்றுலா தலங்கள் உள்ளன. முடிகெரே தாலுகா தேவரமளே மலைப்பகுதி மற்றும் எத்தினபுஜா மலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இதில் எத்தினபுஜா மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலை மீது நடந்து செல்வார்கள். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை சிக்கமகளூரு மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது.

இதனால் முல்லையன்கிரி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டன. இதனை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் எத்தினபுஜா மலையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு கலெக்டர் மீனா நாகராஜ் தடை விதித்துள்ளார்.

இதுகுறித்து மூடிகெரே தாலுகா வனத்துறை அதிகாரி நவீன் கூறுகையில், மூடிகெரே தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இந்தநிலையில் தற்போது எத்தினபுஜா மலை பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டு இருப்பதால் அங்கு மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே எத்தினபுஜா மலைக்கு சுற்றுலா நடைப்பயிற்சி செல்லவோ, மலை பகுதிக்கு வாகனங்களில் வரவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை எத்தினபுஜா மலைக்கு யாரும் வரவேண்டாம், என்றார்.

எத்தினபுஜா மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்