மழைக்கால கூட்டத்தொடர்: மத்திய அரசு சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2022-07-17 04:53 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடரை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக அக்னிபத் திட்டம், மராட்டிய ஆட்சி கவிழ்ப்பு உள்ளிட்ட விவகாரங்களால் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

இதனை தொடர்ந்து, இன்று மாலையில் இதைப்போன்ற கூட்டத்துக்கு மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவும் அழைப்பு விடுத்து உள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற அனைத்துக்கட்சிகளுக்கும் அவர் அழைப்பு அனுப்பி உள்ளார்.

மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அவரது தற்போதைய பதவிக்காலத்தின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.

Tags:    

மேலும் செய்திகள்