கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு - மத்திய குழு நேரில் ஆய்வு

கேரளா அரசுக்கு உதவும் வகையில் மத்திய சுகாதாரத்துறை குழு திருவனந்தபுரத்திற்கு வருகை தந்துள்ளது.

Update: 2022-07-16 07:42 GMT

திருவனந்தபுரம்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் அவருடன் தொடர்புடைய 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை பாதித்த நபர் கடந்த 12- ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்திருந்தார். கேரள மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் உறுதியாகி உள்ள நிலையில் அம்மாநில சுகாதாரத்துறைக்கு உதவும் வகையில் மத்திய சுகாதாரத்துறை குழு ஒன்றை அனுப்பி வைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபருடன் திருவனந்தபுரம், கொல்லம், பத்தணாம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாக பயணம் செய்து வந்துள்ளனர். அந்த மாவட்டங்களில் சிறப்பு உஷார் நிலை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் 164 பயணிகளும், 6 சிப்பந்திகளும் இருந்துள்ளனர். மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் மையங்கள் உருவாக்கப்படும்.

விமானத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் 11 பேர் அமர்ந்து வந்துள்ளனர். அவர்கள் அதிக ஆபத்து உள்ளவர்கள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபரின் பெற்றோர், ஒரு ஆட்டோ டிரைவர், ஒரு வாடகைக்கார் டிரைவர், ஒரு தனியார் ஆஸ்பத்திரியின் தோல் சிகிச்சை நிபுணர் ஆகியோர் முதன்மை பாதிப்பு பட்டியலில் உள்ளனர்.

இந்த நிலையில், கேரள மாநில அரசுக்கு உதவும் வகையில் மத்திய சுகாதாரத்துறை குழு திருவனந்தபுரத்திற்கு வருகை தந்துள்ளது. இந்த குழுவினர் அங்குள்ள மருத்துவ கல்லூரியில் ஆய்வு நடத்தினர். மேலும், கேரளாவில் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், விரைவில் கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்ல இருப்பதாகவும் மத்திய குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்