நடனம் ஆடிய பெண் மீது பணமழை; காங்கிரஸ் தொண்டர் மன்னிப்பு கேட்க பா.ஜ.க. வலியுறுத்தல்
கர்நாடகாவில் திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிய பெண் மீது பணமழை பொழிந்த காங்கிரஸ் தொண்டர் மன்னிப்பு கேட்க பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் தார்வாத் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஹூப்ளி நகரை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் சிவசங்கர் ஹம்பன்னா என்பவர் கலந்து கொண்டார். திருமணத்தின்போது, பெண் ஒருவர் நடனம் ஆடியுள்ளார்.
அவருடன் சேர்ந்து காங்கிரஸ் தொண்டரான சிவசங்கரும் ஆடியுள்ளார். அப்போது, தனது கையில் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றாக நடனம் ஆடிய பெண்ணின் மீது வீசியுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், கர்நாடக பா.ஜ.க. பொது செயலாளர் மகேஷ் தெங்கின்காய் கூறும்போது, வீடியோவை தொலைக்காட்சியில் பார்த்தேன். ஒரு பெண் நடனம் ஆடுகிறார்.
அவர் மீது பணம் வீசப்படுகிறது. பணத்தின் அருமை அவர்களுக்கு தெரியவில்லை. காங்கிரசின் கலாசாரம் என்ன என்று இதுபோன்ற நிகழ்வுகளால் தெரிய வருகிறது. இதனை நாம் பல முறை பார்த்து விட்டோம். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். காங்கிரஸ் கட்சி இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ரவி நாயக்கும் இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார். இந்த பெண்களுக்கு இவர்கள் என்ன மரியாதை கொடுக்கின்றனர் என்பதே எனது ஒரே கேள்வியாக உள்ளது என கூறியுள்ளார்.