அரசியலில் பணம் மட்டுமே எல்லாம் கிடையாது; ஷிண்டே அணியை குறிப்பிட்ட சஞ்சய் ராவத் எம்.பி.

அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் பணம் மட்டுமே எல்லாம் கிடையாது என ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை பற்றி சஞ்சய் ராவத் எம்.பி. குறிப்பிட்டு உள்ளார்.

Update: 2022-07-04 11:50 GMT



புனே,



மராட்டியத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிவசேனாவின் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன், பா.ஜ.க. கைகோர்த்து கூட்டணி அமைத்து உள்ளது. மராட்டிய சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இதனால், மராட்டிய சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளார். இந்நிலையில், சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ, அப்போது நாங்கள் கடுமையாக உழைப்போம்.

கட்சி தனது நிலைப்பாட்டை நிரூபிக்க நெருக்கடி, ஒரு சந்தர்ப்பம் வழங்குகிறது. நாங்கள் அதனை செய்வோம். கட்சியை விட்டு எம்.எல்.ஏ.க்கள் சென்றது பற்றி பேசிய அவர், வருத்தப்படுவதற்கு எங்களுக்கு ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.

விட்டு சென்றவர்களுக்கே அந்த கவலை வேண்டும். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் பணம் மட்டுமே எல்லாம் கிடையாது. சிவசேனா அமைப்பின் ஆதரவின்றி அடுத்த முறை எப்படி நீங்கள் அதிகாரத்திற்கு வருவீர்கள்? என ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்களை எங்கள் மக்கள் என எப்போதும் நம்பினோம். எங்களுடனேயே தொடர்ந்து இருப்பார்கள் என நம்பினோம். பல ஆண்டுகளாக எங்களுடன் ஒன்றாக, கட்சியுடன் இணைந்து செயல்பட்டவர்கள் என அவர் கூறியுள்ளார்.

அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை ஒரு பெரிய விசயம். ஆனால் தற்போது எங்களது நம்பிக்கை முறிந்து போயுள்ளது. ஆனால், எங்கள் மனம் உடைந்து போகவில்லை. இன்னும் தைரியமும், மனவலிமையும் உள்ளன. அதனை என் முகத்தில் நீங்கள் காணலாம் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், நாங்கள் அதிகாரங்களை சுற்றி எப்போதும் இருந்ததில்லை. எப்போதும் நாங்கள் மக்களிடம் செல்வோம். லட்சக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் எங்களுக்கு வலிமை அளிக்கின்றனர். சில பேர் விட்டு சென்றுள்ளனர். அதற்கான பலனை அவர்கள் விரைவில் காண்பார்கள்.

எப்போதும், எம்.எல்.ஏ.க்களோ மற்றும் எம்.பி.க்களோ எங்களது பலம் கிடையாது. கட்சி உழைத்து, எம்.எல்.ஏ.க்களையும் மற்றும் எம்.பி.க்களையும் தேர்தலில் வெற்றி பெற செய்து அவர்களை உருவாக்கும் என எம்.பி. ராவத் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்