அம்மா.... அப்பா... வாக்குகளை விற்காதீர்கள்
அம்மா.... அப்பா... வாக்குகளை விற்காதீர்கள் என குழந்தைகள் மூலம் தபால் அட்டை அனுப்பி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பெங்களூரு-
கர்நாடகத்தில் அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தியும், பணம், பரிசுப்பொருட்கள் வாங்காமல் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியில் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சென்னலிங்கனஹள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளிடம் தேர்தலின் அவசியம், வாக்களிப்பின் மகத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், வாக்குகளை விற்காதீர்கள் என குழந்தைகள் தங்களது தாய், தந்தை உள்பட குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தபால் அட்டை எழுதி அனுப்பும் நிகழ்வும் நடந்தது. இதில் குழந்தைகள் அப்பா.... அம்மா... சகோதரன்... சகோதரி... மே 10-ந்தேதி நடைபெறும் தேர்தலில் அனைவரும் கட்டாயம் தங்களின் ஜனநாயக உரிமையான ஓட்டளிப்பதை உறுதி செய்ய வேண்டும். பணத்துக்கும், பரிசுப்பொருட்களுக்கும் மயங்காமல் வாக்களிக்க வேண்டும். நல்லவர்களை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்து சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்று குழந்தைகள் தங்களது தாய், தந்தைக்கு தபால் அட்டையில் எழுதி அனுப்பினர்.
தேர்தல் திருவிழாவில் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், ஓட்டுக்கு பணம் வாங்குவதை தடுக்கவும் இத்தகைய பிரசாரத்தை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.