சிவமொக்கா விமான நிலையத்தை நாளை மறுநாள் மோடி திறந்து வைக்கிறார்
சிவமொக்கா விமான நிலையத்தை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
சிவமொக்கா:
சிவமொக்கா விமான நிலையம்
சிவமொக்கா நகரையொட்டிய சோகானே பகுதியில் ரூ.442 கோடி செலவில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா வருகிற 27-ந்தேதி (நாைள மறுநாள்) நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி சோகனே பகுதியில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மேலும் பிரதமர் மோடி வருகையையொட்டி சிவமொக்காவில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சோகானே விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் நேற்று கலெக்டர் செல்வமணி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பலத்த பாதுகாப்பு
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு குமார் நிருபர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடி வருகையையொட்டி சிவமொக்காவில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைந்துள்ள பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.
நிகழ்ச்சி நடக்கும் பகுதியை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தண்ணீர் பாட்டில்கள், கைப்பை, கருப்பு வண்ண துணிகள் கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது என்றார்.