மக்களின் வளர்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்குவதே மோடி அரசின் நோக்கம் - அமித் ஷா
மக்களின் மகிழ்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்காமல், அவர்களின் வளர்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்குவதே மோடி அரசின் நோக்கம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய அரசின் முந்தைய அரசுகளை கடுமையாக சாடினார், ஒவ்வொரு அடியும் வாக்கு வங்கியை மனதில் கொண்டு மக்களின் மகிழ்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்காமல், அவர்களின் வளர்ச்சிக்காக கொள்கைகளை உருவாக்குவதே மோடி அரசின் நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வந்த பின்னர் இங்கு பெரிய மாற்றங்கள் நடந்துள்ளன. முந்தைய அரசாங்கத்தின் கொள்கைகள் வாக்கு வங்கியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டன.
மோடி தலைமையிலான அரசு மக்களை மகிழ்விக்கும் திட்டங்களை உருவாக்குதில்லை மாறாக அவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குகிறது. நாங்கள் ஜிஎஸ்டி கொண்டுவந்த போது அதற்கு எதிர்ப்பு இருந்தது. நாங்கள் டிபிடி (நேரடி பலன் பரிமாற்றம்) கொண்டு வந்த போது எதிர்ப்பு அதிகமாக இருந்தது. கண்டிப்பாக இடைத்தரகர்கள் இதனை விரும்ப மாட்டார்கள். இது போல தான் அரசு எடுக்கும் முடிவுகள் மக்களுக்கு கடினமானதாக இருந்தாலும் அவர்களின் நலன் சார்ந்தே அவைகள் இருக்கும்.
மோடி அரசு, பிரச்சினைகளை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பதில்லை. முன்பு அடிப்படை பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் உருவாக்கப்படவில்லை. மோடி அரசானது கொள்கைகளின் அளவில் மாற்றம் கொண்டு வந்துள்ளது" என்று அமித்ஷா கூறினார்.