எம்.எல்.ஏ. ஆன பிறகு முதல் முறையாக தொகுதி மக்களை சந்தித்த வினய் குல்கர்னி

தார்வாருக்குள் வினய்குல்கர்னி நுழைய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. எம்.எல்.ஏ. ஆன பிறகு முதல்-முறையாக தொகுதி மக்களை அவர் சந்தித்தார்.

Update: 2023-07-09 18:45 GMT

உப்பள்ளி-

தார்வாருக்குள் வினய்குல்கர்னி நுழைய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. எம்.எல்.ஏ. ஆன பிறகு முதல்-முறையாக தொகுதி மக்களை அவர் சந்தித்தார்.

பா.ஜனதா பிரமுகர் கொலை

தார்வார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்த பா.ஜனதா பிரமுகர் லோகேஷ் கவுடா கடந்த 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் காங்கிரஸ் முன்னாள் மந்திரியும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான வினய் குல்கர்னி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார். ஆனால் அவர் தார்வார் நகருக்குள் செல்ல கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை விதித்தது.

இந்தநிலையில், வினய் குல்கர்னி கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தார்வார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்போது தார்வார் தொகுதியில் போட்டியிடுவதால் வாக்கு சேகரிக்க தார்வார் நகருக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் வினய் குல்கர்னி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கோர்ட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

அனுமதி மறுப்பு

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தார்வார் நகருக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என மீண்டும் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் வினய் குல்கர்னி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தார்வாருக்குள் வினய் குல்கர்னி செல்ல அனுமதி மறுத்து உத்தரவிட்டார்.

இதனால் அவர் தார்வாருக்குள் செல்வதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்தநிலையில் தார்வார் தொகுதி மக்களை எப்படி பார்க்க முடியும் என வினய் குல்கர்னி எம்.எல்.ஏ. புலம்பி கொண்டு இருந்தார். இந்தநிலையில், பெலகாவி மாவட்டம் சவதத்தி எல்லம்மா பகுதியில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடந்தது.

அதில், தார்வார் தொகுதி எம்.எல்.ஏ. வினய் குல்கர்னி கலந்து கொள்வார் என காங்கிரஸ் கட்சி சார்பில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி வினய் குல்கர்னி எம்.எல்.ஏ. மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மக்களுக்கு நன்றி

கூட்டத்திற்கு முன்னாள் மந்திரியும், எம்.எல்.சி.யுமான ஜெகதீஷ் ஷெட்டர் தலைமை தாங்கினார். அப்போது, வினய் குல்கர்னி எம்.எல்.ஏ. பேசுகையில்,

தார்வார் நகருக்குள் நான் நுழைய கோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதனால் தார்வார் தொகுதி அருகே உள்ள சவதத்தி எல்லம்மா பகுதியில், தார்வார் தொகுதி மக்களின் குறைகளை கேட்க ஏற்பாடு செய்தேன். கோர்ட்டு மூலம் விரைவில் எனக்கு நீதி கிடைக்கும். நான் கோர்ட்டை மதிக்க கூடியவன். பா.ஜனதா கட்சியில் என்னை சேர வற்புறுத்தி வருகிறார்கள்.

மேலும் பா.ஜனதா கட்சிக்கு வந்தால் வழக்கை ரத்து செய்வதாகவும் கூறி வருகிறார்கள்.நான் கடைசி வரை காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன். தார்வார் தொகுதி மக்களுக்கு எந்த பிரச்சினைகள் இருந்தாலும் தீர்த்து வைப்பேன். எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த தார்வார் தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்