கெம்பேகவுடா சிலை பூங்காவுக்கு புனித மண் சேகரிக்கும் பணி

பெங்களூ சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடா சிலை அமையும் பண்பாட்டு பூங்காவுக்கு புனித மண் சேகரிக்கும் பணியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 7-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

Update: 2022-10-19 18:45 GMT

பெங்களூரு:

இதுகுறித்து கர்நாடக உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சிலை திறப்பு விழா

பெங்களூரு சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கெம்பேகவுடாவுக்கு 108 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க உள்ளார். அந்த சிலை மட்டும் ரூ.85 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. பத்ம பூஷன் விருது பெற்ற சிற்பி ராம்வஞ்சி சுதார் சிலையை வடிவமைத்துள்ளார்.

அவர் குஜராத்தில் நிறுவப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை மற்றும் பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் காந்தி சிலையை அவர் தான் நிறுவினார். கெம்பேகவுடா சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் 23 ஏக்கரில் பண்பாட்டு பூங்கா உருவாக்கப்படுகிறது. இந்த பூங்காவை உருவாக்க கர்நாடகத்தில் உள்ள அனைத்து இடங்களில் இருந்தும் புனித மண் கொண்டு வரப்படுகிறது.

மண் சேகரிக்கும் பணி

இந்த மண் சேகரிக்கும் பணியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற நவம்பர் 7-ந் தேதி தொடங்குகிறது. நாடபிரபு கெம்பேகவுடா ரதம் மூலம் அந்த மண் சேகரிக்கப்படுகிறது. இந்த மண் சிலை திறப்பு விழாவின்போது பயன்படுத்தப்படும். இந்த மண் சேகரிக்கும் பணியை ஒருங்கிணைக்க அனைத்து மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரிகளுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கெம்பேகவுடா சிலை திறப்பு விழா பிரசார பணியில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், முற்போக்கு விவசாயிகள், மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். முன்னாள் பிரதமர் தேவேகவுடா இன்று (அதாவது நேற்று) நேரில் சந்தித்து, மண் சேகரிக்கும் பணி தொடக்க விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்