சமூக வலைதளங்களால் எல்லை தாண்டும் அவலம்...! இந்தியா வந்த ஒரு பெண்... பாகிஸ்தான் சென்ற 4 பெண்கள்

கடந்த ஒரு மாதத்தில் நான்கு வெளிநாட்டு பெண்கள் பாகிஸ்தான் சென்று திருமணம் செய்து கொண்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-07-28 11:30 GMT

தற்போது, சீமா ஹைதர் மற்றும் அஞ்சு காதல் கதை இந்தியா-பாகிஸ்தானில் விவாதப் பொருளாக உள்ளது. எல்லை தாண்டி பாகிஸ்தானில் இருந்து ஒரு பெண் இந்தியா வந்து உள்ளார். சீனா, சிலி, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து 4 பெண்கள் பாகிஸ்தான் சென்று உள்ளனர்.

பாகிஸ்தான் பெண்

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் சீமா ஹைதர் (வயது 30). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு பப்ஜி மொபைல் கேம் விளையாடும் போது, உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா (வயது 23) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்நிலையில் சீமா தனது 4 குழந்தைகளுடன் பாகிஸ்தான் எல்லையை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்து தனது காதலன் சச்சினுடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததற்காக சீமாவும், அவருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக சச்சினும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.தற்போது சீமா பாகிஸ்தான் திரும்ப விரும்பவில்லை என்றும், இந்து மதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் கூறி உள்ளார்.

பள்ளி மாணவனுடன் காதல்

கடந்த ஒரு மாதத்தில் நான்கு வெளிநாட்டு பெண்கள் பாகிஸ்தான் சென்று திருமணம் செய்து கொண்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சிலர் பேஸ்புக் மூலமாகவும், சிலர் ஸ்னாப்சாட் மூலமாகவும், சிலர் டிக்டாக் மூலமாகவும் பாகிஸ்தான் வாலிபர்களை காதலித்து நாட்டை விட்டு ஓடி உள்ளனர்.

மெக்சிகோவைச் சேர்ந்த 49 வயதான ரோசா புனர் என்ற பெண் சமூக வலைதளம் மூலம் பழக்கமான 18 வயதான பள்ளி மாணவன் இஜாஸ் அலியை திருமணம் செய்வதற்காக முழுமையான ஆவணங்களுடன் ஜூன் 17 அன்று பாகிஸ்தான் வந்ததாக மூத்த பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

ரோசாவும் இஜாசும் பேஸ்புக் மூலம் நண்பர்கள் ஆனார்கள். பின்னர் காதலில் விழுந்த ரோசா, இஜாஸை திருமணம் செய்து கொள்ள பாகிஸ்தானுக்கு சென்று உள்ளார். ரோசாவும் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இவரது புதிய பெயர் ஆயிஷா பீபி. இதற்குப் பிறகு, ஜூன் 27 அன்று, அவர் பாரம்பரிய பஷ்டூன் முறைப்படி பெரும் ஆரவாரத்துடன் இஜாஸை மணந்தார்.

திருமணத்திற்குப் பிறகு, ஆயிஷா பீபி ஜூலை 19 அன்று மெக்சிகோ திரும்பினார். மணமகன் இஜாஸ் தனது மெட்ரிகுலேஷன் தேர்வை முடித்துவிட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மெக்சிகோ செல்லவுள்ளார். ஆனால், திருமணச் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களின்படி, ஆயிஷா பீபிக்கு 49 வயதுக்கு மேல் ஆகிறது.

சிலி நாட்டு பெண்

சிலியில் வசிக்கும் 36 வயதான நிக்கோலா, பாகிஸ்தானைச் சேர்ந்த 27 வயது இக்ரமுல்லாவை டிக்டாக் மூலம் காதலித்தார். அதன் பிறகு பாகிஸ்தானுக்கு வந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பாகிஸ்தானுக்கு வருவதற்கு முன்பு பாதுகாப்பு குறித்து நிகோலாவுக்கு சந்தேகம் இருந்ததாக இக்ரமுல்லா கூறுகிறார். பாகிஸ்தானுக்கு விசா பெற நிக்கோலா இரண்டு முறை விண்ணப்பித்திருந்தார்.

ராஜஸ்தான் பெண்

உத்தரபிரதேச மாநிலம் கெய்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு ராஜஸ்தானை சேர்ந்த அரவிந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 13 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்.

அஞ்சு பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லாவுடன் பேஸ்புக் மூலம் பழகி உள்ளார். அவரை தேடி, கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அஞ்சு ஜூலை 21 அன்று ராஜஸ்தானில் உள்ள பிவாடியிலிருந்து பாகிஸ்தானில் உள்ள தீர்பாலாவை அடைந்தார். அங்கு நஸ்ருல்லாவை சந்தித்து உள்ளார்.

அஞ்சு மற்றும் நஸ்ருல்லா பாகிஸ்தானின் திர்பாலா மாவட்ட நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்பு அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் மற்றும் பாத்திமா என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

சீனாவை சேர்ந்த பெண்

பாகிஸ்தான் வாலிபரை காதலிக்கும் நான்காவது பெண் சீனாவை சேர்ந்தவர்.

சீனாவை சேர்ந்த 21 வயதான பெண் காவ்பெங். இவருக்கு சமூக வலைதளம் மூலம் பாகிஸ்தானின் பஜாவூர் பகுதியைச் சேர்ந்த ஜாவேத்துடன் (வயது 18) பழக்கம் ஏற்பட்டது.

ஸ்னாப் சாட் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்பில் இருந்த அவர்கள் காதலித்து வந்தனர். இந்த நிலையில் காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக சீன பெண் காவ்பெங், பாகிஸ்தானுக்கு பயணம் செய்தார். அவர் 3 மாத விசாவில் சீனாவில் இருந்து தில்கிட் வழியாக சாலை மார்க்கமாக இஸ்லாமாபாத் வந்தடைந்தார். அவரை காதலன் ஜாவேத் அழைத்து சென்றார்.

பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக சீன காதலியை தனது சொந்த ஊருக்கு அழைத்து செல்லாமல் லோயர் டிர் மாவட்டம் சமர்பாக் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஜாவேத் அழைத்து சென்று தங்க வைத்தார். பின்னர் காவ்பெங், மதம் மாறி ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கிஸ்வா என்று பெயரை மாற்றினார்.

சீனப் பெண் சமர்பாந்தில் தங்கியிருந்தபோது அவருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஜாவேத் உறவினர்கள் கூறும்போது, ஜாவேத் கல்லூரியில் படித்து வருகிறார். அவரது காதலியை கோர்ட்டில் வைத்து திருமணம் செய்து பதிவு செய்ய உள்ளார். அதன்பின் சில நாட்களில் காவ்பெங் சீனாவுக்கு திரும்பி செல்கிறார். ஜாவேத் இங்கேயே இருப்பார் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்