வயதுக்கு வந்த சிறுமி திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி தேவையில்லை - 15 வயது சிறுமியை கணவருடன் வாழ அனுமதித்த கோர்ட்டு

15 வயதான சிறுமி கடந்த கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Update: 2022-08-24 11:19 GMT

Image Courtesy: AFP

புதுடெல்லி,

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் மாதம் அதே மதத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இஸ்லாமிய மத முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் அந்த இளைஞரும், சிறுமியும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தனது மகளை திருமணம் செய்துகொண்ட இளைஞர் மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து ஏப்ரல் மாதம் இளைஞரை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அந்த சிறுமியை இளைஞரிடமிருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிறுமியிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் ரீதியில் உறவு கொண்டிருந்ததும், சிறுமி கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. சிறுமி 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 2 -ம் தேதி பிறந்துள்ளார். சிறுமிக்கு தற்போது 15 வயது 5 மாதம் ஆகுகிறது.

இதனிடையே, பெற்றோர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது சொந்த விருப்பப்படியே திருமணம் செய்து கொண்டதாகவும், கணவருடன் தன்னை சேர்த்து வைத்து உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் சிறுமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார். கணவரையும், தன்னையும் பிரிக்கக்கூடாது எனவும் சிறுமி தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜஸ்மீட் சிங் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 15 வயதான சிறுமி தனது கணவருடன் வாழ நீதிபதி அனுமதித்தார். மேலும், சிறுமிக்கு பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இஸ்லாமிய மதத்தின் முகமதியன் சட்டத்தின்படி, வயதுக்கு வந்த சிறுமி (இஸ்லாமிய மத சிறுமி) பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்துகொள்ளலாம். மேலும், சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்றாலும் அவர் தனது கணவருடன் சேர்ந்து வாழலாம் என நீதிபதி தெரிவித்தார்.

சிறுமியின் கணவர் மீது பதியப்பட்டுள்ள போக்சோ சட்டம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என தெரிவித்த நீதிபதி, தம்பதி காதலித்து இஸ்லாமிய சட்டத்தின்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதன்பின்னர் உடல் ரீதியிலான உறவு கொண்டுள்ளனர். ஆகையால், இது பாலியல் தொல்லை வழக்கின் கீழ் வராது என தெரிவித்தார்.

மேலும், சிறுமியும் அவரது கணவரும் சேர்ந்து வாழ அனுமதித்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

15 வயது சிறுமியின் திருமணம் செல்லும் என கூறி சிறுமியை அவரது கணவருடன் வாழ அனுமதித்து டெல்லி கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்