இளைஞர் விழாவை மந்திரி எச்.சி.மகாதேவப்பா தொடங்கி வைத்தார்

மைசூரு தசரா விழாவையொட்டி இளைஞர் விழாவை மந்திரி எச்.சி. மகாதேவப்பா தொடங்கி வைத்தார். இந்த விழா வருகிற 13-ந்தேதி வரை நடக்கிறது.

Update: 2023-10-06 18:45 GMT

மைசூரு

தசரா விழா

உலகப்பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் பிரமாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா விழாவில் 14 யானைகள் பங்கேற்கின்றன. அந்த யானைகளுக்கு அரண்மனை வளாகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இந்த ஆண்டு தசரா விழா வருகிற 14-ந் தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் வரை நடக்கிறது. விழா சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் நிறைவடைகிறது.

இந்தநிலையில், இளைஞர் விழா 6-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மைசூரு மானச கங்கோத்ரி கல்வி மைதானத்தில் திறந்த வெளி திரையரங்கில் இளைஞர் விழா தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கலை குழுக்கள்

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தன்வீர்சேட், ஹரிஷ் கவுடா, ஜி.டி.தேவேகவுடா, ஸ்ரீ வத்ஷா, மைசூரு மாநகராட்சி மேயர் சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. யதிந்தீரா சித்தராமையா, எம்.எல்.சி.க்கள் டி.திம்மையா, மரிதிப்பே கவுடா, சி.என். மஞ்ஜேகவுடா, மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத், மாநகர போலீஸ் கமிஷனர் ரமேஷ், மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி காயத்ரி, கலைத்துறை அதிகாரி சின்னப்பா, இயக்குனர் குமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இளைஞர் விழா தொடக்க விழாவை காண 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மானச கங்கோத்ரி கல்வி மைதானத்தில் குவிந்தனர்.

விழாவில் மந்திரி எச்.சி.மகாதேவப்பா பேசுகையில்,

இளைஞர் விழாவில் கர்நாடக மாநில முழுவதும் 400- க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகளின் கலை குழுவினர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கலை குழுவினர்கள் இளைஞர் தசரா விழாவில் கலந்து கொள்வார்கள்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு

7 நாட்கள் வரை நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு நாட்டுப்புற, தேசப்பற்று, தமது கலை திறமைகளை நடத்துவார்கள்.

தினமும் 25 முதல் 30 கலை குழுக்கள் மாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இளைஞர் விழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீமா லட்கர் தலைமையில் நடக்கிறது.

மைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவிற்கு ஒரு வாரம் முன்னதாகவே இளைஞர் விழா நடத்துவது வழக்கம். காரணம் இளைஞர் தசரா விழாவில் அனைத்து கலை குழுவினர்களுக்கும் அவகாசம் கிடைக்காது. தங்களது கலை திறமைகளை இதில் கலந்து காண்பிக்கவே இந்த இளைஞர் விழா நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு நிகழ்ச்சிகள்

இளைஞர் விழா சமயத்தில் பல்வேறு தசரா நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் எல்லோரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது. பலர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள், இளைஞர் தசரா விழாவிற்கு வர முடியாதவர்கள் இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்து கொள்ளலாம்.

இந்த விழாவில் தேசப்பற்று, நாட்டு பற்று, சாதனைகள் பற்றி, கல்வித் திறமை, சந்திரன் 3, அரசியலமைப்பு சாசனம் , மக்களின் முன்னேற்றம், வாழ்வாதாரம், நம் நாட்டின் வரலாறு போன்ற நல்ல  தகவல் தெரிவிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கு  அவகாசம் கொடுத்துள்ளது. இவ்வாறு மந்திரி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்