தனியார் நிறுவனங்களுடன் மந்திரி அஸ்வத் நாராயண் ஆலோசனை

பெங்களூருவில் புறவழிச்சாலையை மேம்படுத்துவது குறித்து தனியார் நிறுவனங்களுடன் மந்திரி அஸ்வத் நாராயண் ஆலோசனை நடத்தினார்.

Update: 2022-11-03 18:45 GMT

பெங்களூரு: பெங்களூருவில் சமீபத்தில் பெய்த கனமழைக்கு புறவழிச்சாலையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு அந்த தனியார் நிறுவனங்கள் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில் அந்த புறவழிச்சாலை தனியார் நிறுவனங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பெங்களூரு புறவழிச்சாலை (ஓ.ஆர்.ஆர். ரோடு) 17 கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ளது. அந்த சாலை பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் இன்று (நேற்று) கலந்துரையாடல் நடத்தினேன். பாதாள சாக்கடை, ஆக்கிரமிப்புகள் அகற்றம், மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகரில் உள்ள சர்வீஸ் சாலைகளை மேம்படுத்துவோம். பெங்களூருவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாங்கள் முயற்சி செய்கிறோம். தனியார் நிறுவனங்கள் தங்களின் சி.எஸ்.ஆர். நிதியை அந்த புறவழிச்சாலை மேம்பாட்டிற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்