லட்சக்கணக்கான தாயார்கள் என்னை இன்று ஆசீர்வதித்து வருகின்றனர்: பிரதமர் மோடி பேச்சு
மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, லட்சக்கணக்கான தாயார்கள் என்னை இன்று ஆசீர்வதித்து வருகின்றனர் என்று பேசியுள்ளார்.
ஷியோபூர்,
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சர்வதேச தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை வாழ்த்து கூறி வருகின்றனர். இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 3 பெண் சீட்டாக்கள் மற்றும் 5 ஆண் சீட்டாக்கள் என மொத்தம் 8 சீட்டாக்களை குனோ தேசிய வனவிலங்கு பூங்காவில் திறந்து விடும் நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சீட்டாக்களை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு உதவிய நமீபியா அரசு நன்றி தெரிவித்து கொண்டார்.
இதன்பின்னர், ஷியோபூர் நகரில் நடந்த சுய உதவி குழுக்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசும்போது, எந்த துறையில் பெண்களின் பிரநிதித்துவம் அதிகரிக்கிறதோ, அத்துறையின் வெற்றி தானாக தீர்மானிக்கப்படுகிறது.
பெண்களால் வழி நடத்தப்பட்ட ஸ்வச் பாரத் அபியான் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என பேசினார். இந்த நாளில், பொதுவாக நான் எனது தாயாரிடம் சென்று, அவரது பாதங்களை தொட்டு ஆசிகளை பெற முயற்சிப்பேன். ஆனால், இன்று என்னால் அவரிடம் செல்ல முடியவில்லை.
ஆனால், பழங்குடியின பகுதிகள் மற்றும் கிராமங்களில் கடுமையாக பணிபுரியும் லட்சக்கணக்கான தாயார்கள் என்னை இன்று ஆசீர்வதித்து வருகின்றனர் என்று அவர் பேசியுள்ளார்.