வடியாத மழைநீரும்... விலகாத சோகமும்.. அடுக்குமாடி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் உணவுக்கே கஷ்டப்படும் கோடீசுவரர்கள்

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்கு கோடீசுவரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Update: 2022-09-07 22:15 GMT

பெங்களூரு: பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்கு கோடீசுவரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கொட்டி தீர்த்த கனமழை

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் எடுத்து உள்ளது. கடந்த 4-ந் தேதி பெங்களூரு நகரில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சர்ஜாப்புரா ரோடு, மகாதேவபுரா, பெல்லந்தூர், எமலூர் பகுதிகளில் ஏரிகள் உடைந்ததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள 2 லே-அவுட்டுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அந்த லே-அவுட்டுகளில் இருந்த விலை உயர்ந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அந்த வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன.

குடியிருப்புகளில் சிக்கியவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. நேற்று பகலில் வெயில் அடித்ததால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிய ஆரம்பித்து உள்ளது. மேலும் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை ராட்சத மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியும் நடந்து வருகிறது. சாலைகளில் தேங்கிய வெள்ளம் வடிந்து வருவதால் வாகன போக்குவரத்து மெல்ல மெல்ல சீராகி வருகிறது. இருப்பினும் வெள்ள நீர் வடிய போதிய வடிகால் வசதி இல்லாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் வெள்ளத்தை வடிய வைப்பதில் மாநகராட்சி பணியாளர்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள், மற்றும் குடியிருப்பு பகுதி மக்கள் சோகத்தில் இருந்து வருகிறார்கள். இதனால் 4-வது நாளாக பெங்களூருவில் பல பகுதிகளில் மக்கள் வெள்ளத்தின் சுவடுகளால் கவலையில் இருந்து வருகிறார்கள்.

ஓட்டல்கள்-உறவினர்கள் வீடுகளில் தஞ்சம்

குறிப்பாக பெங்களூரு புறநகர் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை தான் வெள்ளம் சூழ்ந்தது. அந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளை உள்ளடக்கியது. பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கி கனவு இல்லத்தில் குடியேறிய கோடீசுவரர்கள் பலரும் வெள்ளத்தால் விழிபிதுங்கி போனார்கள். தங்களது கார்கள், வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியதாலும், வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்து தீவு போல் காட்சி அளித்ததாலும் வீட்டுக்குள் முடங்கினர்.

குடியிருப்புகளில் வசித்தவர்கள் அனைவரும் பணக்காரர்கள் என்பதால் அவர்கள் யாரும் முகாமுக்கு செல்லவில்லை. மாறாக தங்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். சிலர் ஓட்டல்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். வெள்ளத்தால் நாங்கள் தற்போது அனைத்தையும் இழந்து நிற்கிறோம் என்று புலம்பி வரும் பணக்காரர்கள் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம் என்று கூறி வருகின்றனர். மேலும் தங்களது நிலையை நினைத்து ஒரு சிலர் கண்ணீரும் வடித்து வருகின்றனர். இதற்கிடையே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்து வருபவர்களுக்கு அவர்கள் வேலை செய்த நிறுவனங்கள் விடுமுறை வழங்காததால் அவர்கள் வீடுகளில் இருந்து டிராக்டர்கள் மூலம் பணிக்கு சென்றதையும் பார்க்க முடிந்தது. எங்கள் நிலை பரிதாபமாக இருக்கும் நிலையில் நிறுவனங்கள் தங்களுக்கு விடுமுறை அளிக்காதது வேதனையாக உள்ளதாக ஐ.டி. ஊழியர்கள் தங்களது குமுறலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒரு வீட்டின் விலை ரூ.10 கோடி

இந்த நிலையில் பெங்களூரு நாகவாரா பகுதியில் உள்ள எப்சிலான் என்ற ஆடம்பர குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அங்கு உள்ள ஒரு வீட்டின் விலை ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது. அங்கு தொழில் அதிபர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தான் பெரும் அளவில் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மூழ்கின.

வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அந்த குடியிருப்பில் வசித்து வந்த ஸ்டார்ட்அப் கட்டுமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினோத் கவுசிக், பர்பிள்பிரண்ட் டெக்னாலஜி என்ற நிறுவனத்தின் இயக்குனர் மீனா கிரிசபலா ஆகியோரும் தங்களது குடும்பத்தினருடன் வீட்டை காலி செய்து விட்டு டிராக்டரில் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த குடியிருப்பில் வசித்து வரும் மற்றவர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

பெங்களூருவில் காணாமல் போன முக்கிய ஏரிகள்

பெங்களூருவில் மழை பாதிப்பு பெருமளவு ஏற்படுவது ஏரிகள் ஆக்கிரமிப்பு தான் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதன்படி, பெங்களூருவில் முக்கியமான ஏரிகள் காணாமல் போய் இருப்பதுடன், அந்த ஏரிகள் இருந்த பகுதிகளில் தற்போது என்னென்ன இருக்கிறது என்பது பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளது.

ஏரிகள் தற்போதைய நிலை

சூலே ஏரி - கால்பந்து மைதானம்

அக்கி திம்மனஹள்ளி ஏரி - ஆக்கி மைதானம்

சம்பங்கி ஏரி - கன்டீரவா காம்பிளக்ஸ்

தர்மான்ட் புதி ஏாி - கெம்பேகவுடா பஸ் நிலையம்

செல்லக்கட்டா ஏரி - கர்நாடக பள்ளி கூட்டமைப்பு

கோரமங்களா ஏரி - நேஷனல் கேம்ஸ் காம்பிளக்ஸ்

சித்தகட்டே ஏரி - கே.ஆர்.மார்க்கெட்

காரன்ஜி ஏரி - காந்தி பஜார்

நாகஷெட்டிஹள்ளி ஏரி - அரசு அலுவலகம்

காடுகொண்டஹள்ளி ஏரி - அம்பேத்கர் மருத்துவ கல்லூரி

டொம்லூர் ஏரி - பி.டி.ஏ. லே-அவுட்

மில்லர்ஸ் ஏரி -குருநானக் பவன் மற்றும் பேட்மிண்டன் மைதானம்

சுபாஷ்நகர் ஏரி - குடியிருப்பு பகுதி

Tags:    

மேலும் செய்திகள்