கர்நாடக தேர்தலில் களமிறங்கும் கோடீசுவர வேட்பாளர்கள்; டி.கே.சிவக்குமாருக்கு ரூ.1,347 கோடி, எம்.டி.பி. நாகராஜுக்கு ரூ.1,510 கோடி சொத்துகள்
கர்நாடக சட்டசபை தேர்தலில் டி.கே.சிவக்குமார், எம்.டி.பி.நாகராஜ், சஜியா தரணும் ஆகியோர் கோடீசுவர வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர்.
பெங்களூரு:
சொத்து மதிப்பு
கர்நாடக சட்டசபை தோ்தலையொட்டி தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நேற்று நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் ஒசக்கோட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார். இதில் அவரின் சொத்து மதிப்பு ரூ.1,510 கோடி என்று காட்டியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டார். அப்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1,015 கோடியாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.495 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அவரிடம் ரொக்கமாக ரூ.6.48 கோடி, அவரது மனைவியிடம் ரூ.34.29 லட்சமும், வங்கி டெபாசிட் அவரது சேமிப்பு கணக்கில் ரூ.29.12 கோடி, மனைவி பெயரில் ரூ.6.16 கோடி, நிலையான டெபாசிட் அவரது பெயரில் ரூ.33 கோடி, மனைவி பெயரில் 1.99 கோடி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தங்க நகைகள்
அவர் ரூ.105.91 கோடியை பிறருக்கு கடன் வழங்கியுள்ளார். அவரது மனைவி ரூ.19.93 கோடி கடன் வழங்கி இருக்கிறார். அவரிடம் 993 கிராம் தங்க நகைகள், ரூ.98.93 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், 234 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன. இந்த தங்க நகைகள், வைரம், வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2.41 கோடி ஆகும்.
அவரது மனைவியிடம் 2 கிலோ 879 கிராம் தங்க நகைகள், 26 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன. அவரிடம் உள்ள தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.1.64 கோடி ஆகும். எம்.டி.பி.நாகராஜிடம் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.372.42 கோடி. அவரது மனைவியிடம் உள்ள அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.163.78 கோடி ஆகும்.
அசையா சொத்துக்கள்
எம்.டி.பி.நாகராஜிடம் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.798.38 கோடி ஆகும். அவரது மனைவியிடம் ரூ.274.97 கோடி சொத்துக்கள் உள்ளன. வங்கிகள் உள்ளிட்ட பிற நிதி நிறுவனங்களில் அவருக்கு ரூ.71 கோடியும், அவரது மனைவிக்கு ரூ.27.35 கோடியும் கடன் உள்ளது. எம்.டி.பி.நாகராஜ், அவரது மனைவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,607 கோடி.
இதில் அவர்களின் கடன்களை கழித்தால், சொத்து மதிப்பு ரூ.1,510 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் பிரமாண பத்திரத்தில் இடம் பெற்றுள்ளன.
டி.கே.சிவக்குமார்
இதுபோல் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று கனகபுராவில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கும், அவரது மனைவிக்கும் சோ்த்து சுமார் ரூ.1,347 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவரது மனைவி பெயரில் ரூ.133 கோடி சொத்துக்கள் உள்ளன. மீதமுள்ள சொத்துக்கள் டி.கே.சிவக்குமார் பெயரில் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.840 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.507 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. டி.கே.சிவக்குமாருக்கு ரூ.226 கோடியும், அவரது மனைவிக்கு ரூ.34 கோடியும் கடன் உள்ளது.
இவர்களைவிட பெங்களூரு சிக்பேட்டை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டிக்கெட் கேட்டு வந்த கே.ஜி.எப். பாபு தற்போது தனது மனைவி சஜியா தரணத்தை சுயேச்சையாக களம் நிறுத்தி உள்ளார். அவரது மனைவி பெயரில் ரூ.1,662 கோடி சொத்து இருப்பதாக அவர் பிரமாண பத்திரத்தில் கணக்கு காட்டி இருக்கிறார். இதன்மூலம் அவர் கர்நாடகத்தில் பணக்கார வேட்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.