இழப்பீடு வழங்காத மெஸ்காம் அலுவலக பொருட்கள் ஜப்தி
மின்கம்பி அறுந்து விழுந்து பெண் பலியான வழக்கில் இழப்பீடு வழங்காத மெஸ்காம் அலுவலகத்தின் பொருட்கள் ஜப்தி செய்யும் படி மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிவமொக்கா:-
சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகாவில் அரேதலகட்டே கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தோட்டம் ஒன்றில், கடந்்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி வனஜாம்மா என்ற பெண் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த விவசாய தோட்டத்தின் மேல் சென்ற மின் கம்பி அறுந்து வனஜாம்மா மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மெஸ்காம் நிர்வாகத்தின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்ததாக கூறி, குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் மெஸ்காம் நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்நிலையில் மெஸ்காம் நிர்வாகத்தை கண்டித்து, பெண்ணின் குடும்பத்தினர் சொரப் தாலுகா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது குறித்து விசாரித்த தாலுகா கோர்ட்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.9 லட்சத்து 53 ஆயிரத்து 670 இழப்பீடாக வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் மெஸ்காம் நிர்வாகம் இந்த பணத்தை வழங்கவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்து நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இதுவரை மெஸ்காம் நிர்வாகம் ரூ.9 லட்சத்து 53 ஆயிரத்து 670 இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை மெஸ்காம் நிர்வாகம் மதிக்கவில்ைல. இந்நிலையில் கோர்ட்டை அவமதித்து மட்டுமின்றி,உரிய இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்தால், மெஸ்காம் அலுவலகத்தின் பொருட்களை ஜப்தி செய்யும்படி தாலுகா நிர்வாகத்திற்கு உத்தரவிடுவதாக கூறினார். இந்த உத்தரவையடுத்து தாலுகா நிர்வாக அதிகாரிகள் ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.