மேகதாது திட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியம்; டி.கே.சிவக்குமார் பேச்சு

மண்டியா, மைசூரு, ஹாசன் விவசாயிகளுக்கு நீர் வழங்க மேகதாது திட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியம் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

Update: 2023-01-27 20:48 GMT

மண்டியா:

மண்டியா, மைசூரு, ஹாசன் விவசாயிகளுக்கு நீர் வழங்க மேகதாது திட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியம் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

மண்டியா விவசாயிகள்

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் பொதுக்கூட்டம் மண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

இது வெறும் காங்கிரசின் யாத்திரை மட்டுமல்ல, மக்களின் குரலை ஒலிக்கும் யாத்திரை ஆகும். மக்களின் கஷ்டங்களை நாங்கள் அறிந்து கொள்கிறோம். ராமநகரும், மண்டியாவும் ஒன்றே என நினைத்து நான் இதுவரை பணியாற்றி வந்துள்ளேன். மண்டியா தனது உரிமைக்காக தீவிரமாக போராடும் ஆண் தன்மைமிக்க பூமி. மண்டியா விவசாயிகள் நாட்டிற்கே முன்மாதிரி விவசாயிகளாக தங்களின் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

பாதுகாக்க வேண்டும்

விவசாயிகளுக்கு சம்பளம், ஓய்வூதியம், சம்பள உயர்வு என்று எதுவும் கிடையாது. நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகளை நாம் பாதுகாக்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிப்பதாக பா.ஜனதா கூறியது. ஆனால் இதுவரை விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கவில்லை. மண்டியாவில் 7 தொகுதிகளிலும் ஜனதா தளம் (எஸ்) வெற்றி பெற்றது. நீங்கள் கொடுத்த இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்று கொண்டோம்.

மதவாத பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்திற்கு வரக்கூடாது என்று கருதி ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு நாங்கள் ஆட்சியை நடத்தும் பொறுப்பை வழங்கினோம். குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்கினோம். அதே போல் தேவேகவுடாவை காங்கிரஸ் பிரதமராக்கியது. அதனால் இந்த முறை எனக்கு நீங்கள் பலம் கொடுக்க வேண்டும். மேகதாது திட்டத்தை செயல்படுத்த கோரி பாதயாத்திரை நடத்தினோம்.

வேளாண் சட்டங்கள்

இந்த ஆண்டு கனமழை பெய்து தமிழ்நாட்டிற்கு 646 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் சென்றுள்ளது. அதில் 469 டி.எம்.சி. நீர் கடலில் கலந்துள்ளது. மண்டியா, மைசூரு, ஹாசன் விவசாயிகளுக்கு நீர் வழங்க மேகதாதுவில் அணை கட்ட வேண்டியது அவசியம். பெங்களூரு நகருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். இந்த பாதயாத்திரை மேற்கொண்டதற்காக என் மீது 25 வழக்குகள் போட்டனர்.

மத்திய அரசின் கருப்பு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி போராடினேன். அதற்கும் என் மீது வழக்கு போட்டனர். அனைத்து சாதி, மதத்தினரையும் அரவணைத்து செல்கிறோம். விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த காங்கிரஸ் தயாராக உள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 வழங்குவோம் என்று அறிவித்துள்ளோம். இந்த திட்டத்தை நாங்கள் நிச்சயம் அமல்படுத்துவோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்