மைசூருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கர்நாடகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி மைசூருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
மைசூரு
கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
அதன்படி நேற்று மைசூருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கர்நாடக மாநிலத்தை அரசு உடனடியாக வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
மேலும் மாநிலத்தில் 25 லட்சம் ஏக்கர் நிலத்தில் விதைகளை விதைக்கவில்லை, 2 கோடி ஏக்கர் நிலத்தில் பயிர்கள் தண்ணீர் இல்லாததால் கருகிவிட்டன என்று கூறினர்.
மேலும் பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.