மராட்டிய இடைத்தேர்தல்; வெற்றி பெறுவோம் என தெரிந்தும் போட்டியில் இருந்து விலகி உள்ளோம்: பா.ஜ.க.

மராட்டியத்தில் அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என தெரிந்தும் போட்டியில் இருந்து விலகி எடுத்துக்காட்டாக இருக்கிறோம் என மாநில பா.ஜ.க. தலைவர் கூறியுள்ளார்.

Update: 2022-10-17 09:25 GMT



புனே,


மராட்டியத்தில் அந்தேரி கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரமேஷ் லத்கே. இவரது மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதற்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலில், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) சார்பில் வேட்பாளராக ருதுஜா லத்கே நிறுத்தப்பட்டு உள்ளார். இந்த நிலையில், லத்கேவுக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் வேட்பாளர் யாரையும் இடைத்தேர்தலில் களமிறக்க வேண்டாம் என கோரி மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் வழியே வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

இதுபற்றி சமூக ஊடகத்தில் வெளியான அந்த கடிதத்தில், ரமேஷ் லத்கே மறைவால், அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. அதனால், இடைத்தேர்தல் நடத்துவது அவசியம் ஆகியுள்ளது. ரமேஷின் மனைவி ருதுஜா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லத்கேவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்த தேர்தலில் மராட்டிய நவநிர்மாண் சேனா சார்பில் யாரும் போட்டியிடவில்லை என அதில் தெரிவித்து உள்ளார்.

அரசியல் களத்தில் ரமேஷின் பயணம் மற்றும் வளர்ச்சியை நான் கண்டிருக்கிறேன். அதனால், ருதுஜா லத்கேவுக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளர் யாரையும் களமிறக்க வேண்டாம் என கடிதத்தில் ராஜ்தாக்கரே கோரிக்கை விடுத்து உள்ளார்.

இந்த சூழலில், மும்பை அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடாது என அக்கட்சியின் மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரசேகர் பவன்குலே நாக்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

எங்களுடைய கட்சி வேட்பாளர் முர்ஜி பட்டேல் தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவார். வெற்றி எங்களுக்கு கிடைக்கும் என்பது உறுதியாக எங்களுக்கு தெரியும். ஆனால், மாநிலத்தில் இந்த நடைமுறையை நாங்கள் நீண்டகாலத்திற்கு கடைப்பிடித்து வருகிறோம்.

நாங்கள் வெற்றி பெறுவோம் என்றபோதிலும், வேட்புமனுவை திரும்ப பெற்றுள்ளது, மக்களுக்கான எடுத்துக்காட்டாக இருக்கும். இந்த நல்ல முடிவை தேவேந்திர பட்னாவிஸ் எடுத்து உள்ளார் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்