மணிசங்கர் ஐயரின் கருத்து காங்கிரஸ் கட்சியின் இந்திய எதிர்ப்பு மனநிலையை காட்டுகிறது - பா.ஜ.க. விமர்சனம்

மணிசங்கர் ஐயரின் கருத்து காங்கிரஸ் கட்சியின் இந்திய எதிர்ப்பு மனநிலையை காட்டுகிறது என பா.ஜ.க. விமர்சித்துள்ளது.

Update: 2024-05-29 12:46 GMT

Image Courtesy : ANI

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர், நேற்று புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியபோது, 1962-ல் நடைபெற்ற இந்தியா-சீனா போரை சீன படையெடுப்பு என்று குறிப்பிட்டார். பின்னர், வார்த்தையை தவறாக பயன்படுத்தியதாக அவர் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் அவரது கருத்தில் கட்சிக்கு உடன்பாடு இல்லை என காங்கிரஸ் தெரிவித்தது.

இந்த நிலையில் மணிசங்கர் ஐயரின் கருத்து காங்கிரஸ் கட்சியின் இந்திய எதிர்ப்பு மனநிலையை காட்டுகிறது என பா.ஜ.க. விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், ராகுல் காந்தியின் ஒப்புதல் இல்லாமல் மணிசங்கர் ஐயர் இத்தகைய கருத்தை பேசியிருக்க முடியாது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்றும் விமர்சித்தார்.

மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பேசும் கருத்துகளில் இருந்து அக்கட்சியின் தலைமை அடிக்கடி விலகிக் கொள்வதைப் போல், சீனாவிடம் இருந்தும் காங்கிரஸ் கட்சி விலகிக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், அந்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் கவுரவ் பாட்டியா குறிப்பிட்டார்.

அதோடு, "ராகுல் காந்தியால் இந்தியாவுக்கு துரோகம் செய்ய முடியும், ஆனால் சீனாவுக்கு எதிராக அவரால் செயல்பட முடியாது " என்று குற்றம்சாட்டிய கவுரவ் பாட்டியா, ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீன தூதரகம் வழங்கிய நன்கொடைகளை 'லஞ்சம்' என்றும் விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்