மங்களூரு கலவர வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
மங்களூரு கலவர வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மங்களூரு-
மங்களூரு கலவர வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் 4 வருடங்களுக்கு பிறகு போலீசாரிடம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
மங்களூரு கலவரம்
மத்திய அரசு, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை தாக்கல் செய்து அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. அதாவது இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக அமைந்ததாக கூறப்பட்டது.
அதுபோல் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பந்தர் பகுதியிலும் முஸ்லிம்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
போலீஸ் வலைவீச்சு
இந்த கலவரம் தொடர்பாக ஏராளமானோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு தேசிய விசாரணை முகமை(என்.ஐ.ஏ.) பிரிவுக்கும் மாற்றப்பட்டது. அதன்படி இவ்வழக்கை தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த கலவரம் தொடர்பாக மங்களூரு டவுன் கண்டத் பள்ளி மசூதி அருகே வசித்து வந்த முகமது ரிமாஸ் என்கிற ரீமா(வயது 28) என்பவர் தலைமறைவானார்.
அவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். அவர் மீது மங்களூரு தெற்கு மற்றும் வடக்கு போலீஸ் நிலையங்களில் 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர். மேலும் கலவரத்தை தூண்டியவர்களில் இவர் முக்கியமானவர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
இந்த நிலையில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும் அதற்கான நோட்டீசையும் மங்களூரு உள்பட நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அரபு நாட்டில் இருந்து ஒரு விமான மங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்திறங்கிய பயணிகளிடம் போலீசார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதையடுத்து போலீசார் அவரைப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மங்களூரு கலவரம் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த முகமது ரிமாஸ் என்பது தெரியவந்தது. மேலும் அவர் கலவரம் நடந்த சில நாட்களில் அரபு நாடுகளுக்கு தப்பிச்சென்று அங்கு பதுங்கி இருந்ததும், தற்போது 4 வருடங்கள் கழித்து அவர் பிடிபட்டிருப்பதும் தெரியவந்தது.
விசாரணை
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மங்களூரு மாநகர போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் முகமது ரிமாசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் முகமது ரிமாசிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.