நடத்தையில் சந்தேகம்: மனைவி, ஒன்றரை வயது குழந்தையை குத்திக்கொன்ற கூலி தொழிலாளி
கூலி தொழிலாளிக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
டெல்லி,
புதுடெல்லியின் சுபாஷ் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரஜேஷ் (வயது 24). இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இதனிடையே, மனைவியின் நடத்தையில் பிரஜேஷ் சந்தேகப்பட்டுள்ளார். தன் மனைவி வெறொரு நபருடன் தொடர்பில் இருப்பதாகவும், தன் மனைவிக்கு பிறந்த குழந்தை தன் குழந்தை இல்லை என்றும் பிரஜேஷ் சந்தேகப்பட்டுள்ளார். இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக எண்ணிய பிரஜேஷ் அவருடன் நேற்று இரவு மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த சமையல் கத்தி மற்றும் கூர்மையான ஸ்கூருடிரைவரை கொண்டு தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது மகனை குத்தினார்.
இதில் படுகாயமடைந்த அப்பெண்ணும், குழந்தையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், போலீசார் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பெண்ணையும், குழந்தையையும் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி, ஒன்றரை வயது குழந்தையை கொன்ற கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.