மத்திய அரசை கண்டித்து 2 நாள் தர்ணா போராட்டத்தை தொடங்கிய மம்தா பானர்ஜி

திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி விட்டதாக கூறி, 2 நாள் தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி தொடங்கினார்.

Update: 2023-03-29 23:53 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் 100 நாள் வேலைத்திட்டம், இந்திரா வீட்டு வசதி திட்டம் மற்றும் சாலை திட்டங்களுக்கான நிதிைய மத்திய அரசு நிறுத்தி விட்டதாக அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.

இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்தி விட்டதாகவும் கூறியிருந்தார்.

எனவே, மத்திய அரசை கண்டித்து 2 நாள் தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். அதன்படி, மம்தா பானர்ஜி தனது 2 நாள் தர்ணா போராட்டத்தை நேற்று தொடங்கினார்.

2 நாள் தர்ணா

அதன்படி, மம்தா பானர்ஜி தனது 2 நாள் தர்ணா போராட்டத்தை நேற்று தொடங்கினார். கொல்கத்தாவில் சிவப்பு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முன்பு தர்ணா போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த இடத்துக்கு நேற்று மதியம் மம்தா பானர்ஜி வந்து சேர்ந்தார்.

அவருடன் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிர்ஹத் ஹக்கிம், அரூப் பிஸ்வாஸ், சுப்ரதா பக்ஷி, சொவந்தேவ் சட்டோபாத்யாயா ஆகியோரும் உடன் வந்தனர்.

அந்த இடத்தில் மம்தா பானர்ஜி, தர்ணா போராட்டத்தை தொடங்கினார். இன்று (வியாழக்கிழமை) மாலை வரை போராட்டம் நடக்கிறது.

ரூ.1 லட்சம் கோடி பாக்கி

முன்னதாக, இந்த போராட்டம் குறித்து ேநற்று முன்தினம் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

100 நாள் வேலைத்திட்டத்தில் வேலைகளை முடிப்பதில் மேற்கு வங்காள அரசு முன்னணியில் உள்ளது. இருப்பினும், அத்திட்டத்துக்கான ரூ.7 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.

வீட்டுவசதி மற்றும் சாலை திட்டங்களுக்கான நிதியையும் அளிக்கவில்லை. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்தி விட்டது. மொத்தம் ரூ.1 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளது.

சர்வாதிகார போக்கு

இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் மேற்கு வங்காளத்துக்கு எதுவும் ஒதுக்கப்படவில்லை. மேற்கு வங்காளத்தை பாரபட்சமாக, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது.

அதன் சர்வாதிகார போக்கை எதிர்த்து, மாநில அரசின் சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்ட தர்ணா போராட்டம் நடத்துவேன் என்று அவர் கூறினார்.

மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்துவது, இது 3-வது முறை ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்