மம்தா பானர்ஜி 'இந்தியா' கூட்டணியில் முக்கிய அங்கமாக உள்ளார் - ராகுல் காந்தி

தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-06 12:29 GMT

Image Courtesy : PTI

ராஞ்சி,

2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜி, மேற்கு வங்கத்தில் தங்களது கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' மேற்கொண்டு வருகிறார். தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, கும்லா மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு விவகாரம் குறித்து பேசிய அவர், "இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சியினரைப் போலவே, மம்தா பானர்ஜியும் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறார். தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது குறித்து பேசிய அவர், "நிதிஷ் குமார் வெளியேறியதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை உங்களால் யூகிக்க முடியும். பீகாரில் இந்தியா கூட்டணி ஒன்றாக இணைந்து போராடும்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்