மராட்டியம்: அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகளை கண்டித்து எதிர்க்கட்சிகள் நூதன போராட்டம்
அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களில் பலர் பாம்பு கடி, ஆர்செனிக் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட விஷம் குடித்தவர்களும் அடங்குவார்கள் என டாக்டர் சியாமராவ் வகோட் கூறினார்.
நாக்பூர்,
மராட்டிய சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மராட்டிய அரசு மற்றும் சுகாதார மந்திரி தனாஜி சவந்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் மராட்டிய சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான அம்பாதாஸ் தன்வே, பலகைகளை கைகளில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அந்த பலகையில், உயிரிழப்பு ஏற்பட்ட அரசு மருத்துவமனைகள் அமைந்த பகுதிகள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கைகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஆக்சிஜன் முக கவசம் ஒன்றையும் அவர் அணிந்தபடி காணப்பட்டார். உடனிருந்தவர்கள் கழுத்தில் மருத்துவ உபகரணங்களை அணிந்தபடியும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அக்டோபரில், மராட்டியத்தின் நான்டெட் நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் மருந்துகள் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
சங்கராவ் சவான் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இந்த சம்பவம் ஏற்பட்டது. எனினும், அந்த அரசு மருத்துவமனையின் டீன் பொறுப்பு வகிக்கும் டாக்டர் சியாமராவ் வகோட் கூறும்போது, உயிரிழந்தவர்களில் பலர் பாம்பு கடி, ஆர்செனிக் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட விஷம் குடித்தவர்களும் அடங்குவார்கள் என கூறினார்.
பல பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், எங்களுக்கு சில கஷ்டங்கள் இருந்தன. நாங்கள் ஹாப்கைன் மையத்தில் இருந்து மருந்துகளை வாங்க வேண்டிய நிலையில் இருந்தோம். ஆனால், அதுவும் நடக்கவில்லை என்றும் கூறினார்.
சந்திராப்பூர், நான்டெட், கல்வா (தானே) மற்றும் சத்ரபதி சாம்பாஜி நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து, மராட்டியத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.