பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மராட்டிய மாநில மந்திரி-சபை கூட்டம்..!

இந்த கூட்டத்தில் அனைத்து மந்திரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்து உள்ளார்.

Update: 2022-06-22 03:06 GMT

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா கட்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்து 162 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

நேற்று முன்தினம் நடந்த மராட்டிய மேல்-சபை தேர்தலிலும் ஆளும் கூட்டணியை மிஞ்சி பா.ஜனதா வெற்றி பெற்றது. மேல்-சபைக்கு நடந்த தேர்தலின் போது மாலை 5 மணி வரை சிவசேனா சட்டமன்ற குழு தலைவரான மந்திரி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடனே இருந்தார். அதன்பிறகு அவரும், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலரும் திடீரென மாயமானார்கள். அவர்களை சிவசேனா தலைமையால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

மந்திரி ஏக்நாத் ஷிண்டேயுடன் அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்திற்கு இரவோடு, இரவாக சென்று அங்குள்ள ஓட்டலில் தங்கியது பின்னர் தெரியவந்தது. நேற்று காலை மேலும் சில சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் சூரத் ஓட்டலுக்கு சென்று அவர்களோடு தங்கினர்.

இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேயுடன் இருக்கும் 22 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியல் வெளியானது. இருப்பினும் தங்களது அணியில் 30-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக அவர்கள் கூறினர்.

அவர்கள் சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பா.ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகின.சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அமைக்க பா.ஜனதா தீவிரம் காட்டி உள்ளது.ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவசேனா எம்.எல்.ஏ. ஒருவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். இதனால் சட்டசபையில் தற்போதைய பலம் 287 ஆக உள்ளது. இதனால் 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றால் பா.ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியும். சிறிய கட்சிகள், சுயேச்சைகள் என 26 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா ஆட்சியமைக்கும் பட்சத்தில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளும் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று கருதப்படுகிறது.

அதேநேரத்தில் ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜனதாவின் முயற்சி பலிக்காது என்று சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

இந்த நிலையில், மராட்டிய மாநில அமைச்சரவை இன்று மதியம் ஒரு மணிக்கு கூடுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டு உள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்து மந்திரிகளும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்து உள்ளார்.

முன்னதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வர்ஷா பங்களாவில் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினார். அப்போது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல அவர் தொடர்பில் உள்ள எம்.எல்.ஏ.க்களையும் வர்ஷா பங்களாவுக்கு அழைத்து பேசினார். இதுதவிர காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் அவர்களது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தினர்.

இதுதவிர வர்ஷா பங்களாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் சந்தித்து ஏக்நாத் ஷிண்டே விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.மேலும்.ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்