மத்திய பிரதேசம்: ரத்தம் வழிந்தோட, அரை நிர்வாண கோலத்தில்... வீடு, வீடாக உதவி கேட்ட 12 வயது சிறுமி

மத்திய பிரதேசத்தில் ரத்தம் வழிந்தோட, அரை நிர்வாண கோலத்தில் வீடு, வீடாக சென்று 12 வயது சிறுமி உதவி கேட்ட அவலம் நடந்துள்ளது.

Update: 2023-09-28 04:55 GMT

உஜ்ஜைன்,

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரத்தில் பத்நகர் சாலையில் ஆசிரமம் ஒன்று உள்ளது. இதன் வாசல் அருகே 12 வயது சிறுமி பேச முடியாமல் கிடந்துள்ளார். இதனை, அந்த ஆசிரமத்தின் சாமியார் ராகுல் சர்மா என்பவர் கவனித்து உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார்.

இதுபற்றி சாமியார் ராகுல் சர்மா கூறும்போது, ஆசிரமத்தில் இருந்து ஒரு வேலையாக புறப்பட்டு சென்றேன். அப்போது, இந்த சிறுமியை கவனித்தேன். அந்த சிறுமி, ரத்தம் வழிந்தோட, அரை நிர்வாண கோலத்தில் ஆசிரம வாசலில் கிடந்ததும், என்னுடைய ஆடைகளை கொடுத்தேன்.

சிறுமியால் பேச முடியவில்லை. சிறுமியின் கண்கள் வீங்கியிருந்தன. நான் 100-ஐ அழைத்து போலீசாரை தொடர்பு கொண்டேன்.

ஆனால், உதவி எண் வழியே என்னால் போலீசாரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், மஹாகால் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டேன்.

அவர்களிடம் நிலைமை பற்றி விளக்கி கூறினேன். அவர்கள் 20 நிமிடங்களில் ஆசிரமத்திற்கு வந்தடைந்தனர் என கூறியுள்ளார்.

இதுபற்றிய சி.சி.டி.வி. கேமிரா பதிவில், அந்த சிறுமி காயமடைந்தபடி, அரை நிர்வாண கோலத்தில் வீடு, வீடாக சென்று உதவி கேட்கும் காட்சி காணப்படுகிறது. ஆனால், யாரும் உதவிக்கு வரவில்லை.

ஒருவர் அந்த சிறுமியை விரட்டும் காட்சிகள் காணப்படுகின்றன. அவர் ஆசிரமத்திற்கு வந்த பின்னரே, சிறுமிக்கு உதவி கிடைத்துள்ளது.

இதுபற்றி சாமியார் கூறும்போது, பாதுகாப்பாக இருக்கிறாய் என சிறுமிக்கு உறுதி அளித்து விட்டு, சிறுமியிடம் பேரையும், அவருடய குடும்ப விவரங்களையும் கேட்டோம். ஆனால் பயந்து போயிருந்த சிறுமி, எங்களிடம் பேசினார். அவர் இருப்பிடம் பற்றி கூறினார். ஆனால், சிறுமி கூறிய விவரங்களை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.

இதன்பின்பு, போலீசார் விரைந்து வந்து, சிறுமியை அழைத்து சென்றனர். இதுபற்றி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பாலியல் பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் பற்றி சமூக ஊடகங்களில் தகவல் பரவியதும் நெட்டிசன்கள் கொந்தளித்து, விமர்சனங்களை பகிர்ந்தனர். இதுபற்றி மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா கூறும்போது, சிறுமியின் நிலைமை சீராக உள்ளது என கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்