மத்திய பிரதேசம்: காதலனுடன் சேர்ந்து தந்தை, சகோதரனை கொலை செய்த 17 வயது சிறுமி கைது
காதலனுடன் சேர்ந்து தந்தை, சகோதரனை கொலை செய்த 17 வயது சிறுமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் விஸ்வகர்மா. ரெயில்வே ஊழியராக பணியாற்றி வந்த இவர், தனது 17 வயது மகள் மற்றும் 8 வயது மகனுடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி, ராஜ்குமார் விஸ்வகர்மாவை அவரது மகளான 17 வயது சிறுமி, 22 வயதான தனது காதலனுடன் சேர்ந்து கோடாரியால் தாக்கி கொலை செய்தார். மேலும் தனது தம்பியையும் அந்த சிறுமி கொலை செய்து, அவனது உடலை பிரிட்ஜில் வைத்துள்ளார். இரண்டு கொலைகளையும் செய்துவிட்டு தனது காதலனுடன் அந்த சிறுமி தப்பிச் சென்றுள்ளார்.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலிசார், குற்றவாளிகள் இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் இருவரும் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் பகுதியில், குற்றவாளிகள் இரண்டு பேரையும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறுமி 18 வயதுக்கு குறைவானவர் என்பதால் அவர் சிறார் நீதி வாரியத்தின் முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என்றும், இருப்பினும் அவரை மேஜராக கருதி விசாரணை நடத்த வேண்டும் என்று முறையிட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.