மாடால் விருபாக்ஷப்பா ஜாமீனில் விடுதலை

பல்வேறு நிபந்தனைகளுடன் மாடால் விருபாக்‌ஷப்பாவுக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.

Update: 2023-04-15 21:32 GMT

பெங்களூரு

ரூ.40 லட்சம் லஞ்சம்

தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மாடால் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த். இவர் கர்நாடக அரசு உயர் அதிகாரியாக இருந்தார். இவர் மைசூரு சாண்டல் சோப்பு நிறுவனத்திற்கு ரசாயன பொருட்கள் வாங்குவது தொடர்பான டெண்டர் பணிக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து காண்டிராக்டர் கொடுத்த புகாரின் பேரில் லோக் அயுக்தா போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதுதொடர்பாக மேலும் 4 பேரை கைது செய்துள்ளனர். இதையடுத்து லோக் அயுக்தா போலீசார் நடத்திய சோதனையில் அவரது வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.8 கோடி மதிப்பிலான ரொக்கம், நகைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ரூ.40 லட்சம் லஞ்ச விவகாரத்தில் மாடால் விருபாக்ஷப்பாவுக்கு முக்கிய பங்கு இருந்தது தெரிந்தது.

ஜாமீன் மனு தள்ளுபடி

இதையடுத்து தலைமறைவாக இருந்த மாடால் விருபாக்ஷப்பாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரையும், அவரது மகன் பிரசாந்தையும் போலீஸ் காவலில் எடுத்து, விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மாடால் விருபாக்ஷப்பா மற்றும் 5 பேர், தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். எனினும், ஒருவருக்கு மட்டும் ஜாமீன் வழங்கினார். இதற்கிடையே பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மாடால் விருபாக்ஷப்பா தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

நிபந்தனைகள்

அந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது நீதிபதி, மாடால் விருபாக்ஷப்பாவுக்கு ஜாமீன் வழங்கினார். மேலும் 3 வாரங்களுக்கு ஒருமுறை லோக் அயுக்தா போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும், ரூ.5 லட்சத்தை உத்தரவாத தொகையாக கோர்ட்டில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க, மாடால் விருபாக்ஷப்பா தனது பாஸ்போர்ட்டை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை நீதிபதி விதித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்