தனது குழந்தைக்கு இந்தியா என பெயர் சூட்டி மகிழந்த பாகிஸ்தான் தம்பதி...!

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்ட தம்பதியர் தனது குழந்தைக்கு 'இந்தியா' என பெயரிட்டுள்ளனர்.

Update: 2023-01-30 08:31 GMT

இஸ்லாமாபாத்,

ஒமர் இசா என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் ஆவார். இவரது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். ஒமர் இசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடுவில் அவர் மகன் படுத்து உறங்குவது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அது குறித்து நீண்ட பதிவையும் எழுதியுள்ளார்.

அந்த பதிவில் ஒமர் இசா கூறியிருப்பதாவது:

புதிய பெற்றோர்கள் அனைவருக்கும் என்னுடைய எச்சரிக்கை. எங்களது குழந்தை இப்ராஹிம் பிறந்தவுடன் அவனை எங்கள் அறையிலேயே படுக்க வைத்துக் கொண்டோம். புதிதாக பெற்றோர்களான எங்களுக்கு அவன் பாதுகாப்பு குறித்து அதீத அக்கறை இருந்தது.

இப்ராஹிம் சிறுவனாக வளர்ந்த பிறகும் கூட எங்கள் அறையிலேயே படுத்து உறங்குகிறான். அவனுக்கென தனி அறை இருந்தால் கூட எங்கள் அறையையே தூங்குவதற்கு பயன்படுத்திக் கொள்கிறான். நான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவன். எனது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். எங்களுக்கு நடுவில் படுத்திருக்கும் எங்கள் மகன் இப்ராஹிமுக்கு புதிய பெயர் சூட்டியுள்ளோம்.

பாகிஸ்தானியருக்கும் வங்கதேசத்தை சேர்ந்தவருக்கும் நடுவில் படுத்திருப்பதால் அவனை 'இந்தியா' என அழைக்கிறோம். 'இந்தியா' எனது வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு தனது பதிவில் ஒமர் இசா குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது. நகைச்சுவையாக இந்த பதிவை எழுதியதாக ஒமர் இசா தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்