பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் துப்பாக்கி முனையில் லட்சக்கணக்கில் பணம், நகை கொள்ளை...!
ரியல் எஸ்டேட் அதிபரான அவர் மந்திரியின் நெருங்கிய உறவினர் ஆவார்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தைசேர்ந்த ரியல் எஸ்டே அதிபர் ஷீஷ்பால் அகர்வால். இவர் டொய்வாலா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஷீஷ்பால் அகர்வால் உத்தரகாண்ட் மாநில கேபினெட் மந்திரி பிரேம்சந்த் அகர்வாலின் நெருங்கிய உறவினர் ஆவார்.
இந்நிலையில், டொய்வாலா பகுதியின் ஹரட் சாலையில் உள்ள ஷீஷ்பால் அகர்வால் வீட்டிற்குள் இன்று நண்பகல் துப்பாக்கி ஏந்திய 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அதிரடியாக நுழைந்தது. அப்போது, ஷீஷ்பாலின் மனைவி மம்தா மற்றும் வீட்டு வேலை செய்யும் 2 ஊழியர்கள் என மொத்தம் 3 பேர் மட்டுமே வீட்டில் இருந்தனர். கொள்ளையர்கள் நுழைந்த நேரத்தில் ஷீஷ்பால் வீட்டில் இல்லை.
துப்பாக்கியுடன் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளை கும்பல் ஷீஷ்பாலின் மனைவி மம்தா மற்றும் வீட்டு வேலை ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டினர். 3 பேரையும் பிணைக்கைதிகளாக பிடித்த கொள்ளை கும்பல் வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் கொள்ளையர்கள் ஷீஷ்பால் இருந்துள்ளனர். பின்னர், கொள்ளையடித்த நகை, பணம், பொருட்களுடன் கொள்ளையர்கள் வீட்டில் இருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் ஷீஷ்பாலின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்ற கொள்ளையர்கள் 6 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.