நாடாளுமன்ற தேர்தல் டிசம்பரில் நடக்க வாய்ப்பு..!! மம்தா பானர்ஜி ஆரூடம்

நாடாளுமன்ற தேர்தலை மத்திய அரசு டிசம்பர் மாதமே நடத்தக்கூடும் எனவும், பிரசாரத்துக்காக அனைத்து ஹெலிகாப்டர்களும் பா.ஜனதா கட்சியால் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Update: 2023-08-28 22:50 GMT

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளன.

ஆனால் இந்த தேர்தலை முன்கூட்டியே அதாவது இந்த ஆண்டு இறுதியிலேயே நடத்த மத்தியில் ஆளும் பா.ஜனதா திட்டமிட்டிருப்பதாக மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கட்சியின் இளைஞரணி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

சர்வாதிகார ஆட்சி

மத்தியில் பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாடு சர்வாதிகார ஆட்சிக்குள் சென்றுவிடும்.

பா.ஜனதாவினர் ஏற்கனவே நமது நாட்டை சமூகங்களுக்கு இடையேயான பகைமையின் தேசமாக மாற்றிவிட்டனர். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அது நம் நாட்டை வெறுப்பு நாடாக மாற்றிவிடும்.

நாடாளுமன்ற தேர்தலை அவர்கள் (பா.ஜனதா) டிசம்பர் மாதத்திலோ அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியிலோ நடத்தலாம் என்று நான் நினைக்கிறேன். பா.ஜனதாவினர் பிரசாரத்துக்காக அனைத்து ஹெலிகாப்டர்களையும் முன்பதிவு செய்து விட்டனர். இதனால் வேறு எந்த கட்சியும் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியாது.

பசுமை பட்டாசுகள்

வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து விவகாரத்தில், சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு சில போலீசாரும் ஆதரவாக உள்ளனர்.

பெரும்பாலான போலீஸ்காரர்கள் அதிகபட்ச நேர்மையுடன் பணியாற்றி வருகின்றனர். ஆனால் சிலர் சமூக விரோதிகளுக்கு உதவி வருகின்றனர். மாநிலத்தில் ஊழல் எதிர்ப்பு பிரிவு இருப்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும். இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? லாபம் சற்று குறையலாம், ஆனால் அது மிகுந்த பாதுகாப்பும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததும் ஆகும்.

பல்கலைக்கழகத்தில் கோஷம்

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கோஷமிட்ட ஏ.பி.வி.பி. மற்றும் பா.ஜனதா தொண்டர்களை கைது செய்ய போலீசாரை அறிவுறுத்தி இருக்கிறேன். இது வங்காளம், உத்தரபிரதேசம் அல்ல. இதை கோஷமிடுபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்