அரசு அதிகாரிகளின் வீடு-அலுவலகத்தில் லோக் அயுக்தா திடீர் சோதனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு புகார் எதிரொலியால் அரசு அதிகாரிகளின் வீடு-அலுவலகத்தில் லோக் அயுக்தா போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-10-21 18:45 GMT

மைசூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு புகார் எதிரொலியால் அரசு அதிகாரிகளின் வீடு-அலுவலகத்தில் லோக் அயுக்தா போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சொத்து குவிப்பு புகார்

மைசூரு, குடகில் அரசு அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக கர்நாடக லோக் அயுக்தா போலீசாருக்கு புகார்கள் வந்தன.

அதன்பேரில் மைசூருவில் நேற்று காலை 6 மணியளவில் லோக் அயுக்தா போலீசார், சொத்து குவிப்பு புகாரின் பேரில் 7 அரசு அதிகாரிகளின் வீடு-அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர்-சப் இன்ஸ்பெக்டர்

இந்த சோதனையில் மைசூரு லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாபு தலைமையில் 7 குழுவினர் ஈடுபட்டனர். அதன்படி ஒரே நேரத்தில் 7 அரசு அதிகாரிகளின் வீடு-அலுவலகங்களில் அந்த குழுவினர் தனித்தனியாக சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வீடு, அலுவலகங்களில் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். இதில் 3 அதிகாரிகளின் வீடுகளில் நீண்ட நேரம் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் நகை, பணத்தையும் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது. குடகு மாவட்டம் மடிகேரியில் சிறிய நீர்ப்பாசன துறையில் என்ஜினியராக பணியாற்றி வரும் ரபீக் என்பவரின் மைசூரு டவுனில் இருக்கும் வீடு, குடகில் உள்ள வீடு மற்றும் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல் குடகு மாவட்டம் மடிகேரி பொதுப்பணி துறையில் என்ஜினீயராக பணியாற்றி வரும் நாகராஜ் என்பவரின் மைசூருவில் உள்ள வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். குடகு மாவட்டம் குஷால்நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஷ் என்பவரது மைசூருவில் உள்ள வீட்டிலும், குடகில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்தது. இதுபோல் மேலும் 4 அரசு அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

பரபரப்பு

குடகு மாவட்டத்தில் 50 பேர் கொண்ட லோக் அயுக்தா போலீசார் 2 குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனால் சோதனையில் கைப்பற்றப்பட்டது குறித்த விவரங்களை சோலீசார் தெரிவிக்கவில்லை. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரால் அரசு அதிகாரிகளின் வீடுகளில், லோக் அயுக்தா போலீசார் திடீர் சோதனை நடத்தியது சக அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்