தகராறில் காயமடைந்த மதுபான கடை ஊழியர் 23 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி சாவு

மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த ஊழியர் 23 நாட்கள் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-17 18:45 GMT

பெங்களூரு:

மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த ஊழியர் 23 நாட்கள் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுக்கடை ஊழியர் மீது தாக்குதல்

பெங்களூரு குமாரசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனது நண்பர் வினோத் என்பவருடன் அருகில் உள்ள மதுபான கடைக்கு சென்றார். அப்போது கடையை அடைக்கும் நேரம் என்பதால், மதுக்கடை ஊழியர் பசவராஜ், கடையை அடைக்க போவதாகவும், செல்லுமாறும் கூறி உள்ளார். இதனால் சுரேஷ் மற்றும் வினோத் கோபம் அடைந்தனர். அவர்கள் பசவராஜை கடுமையாக திட்டி உள்ளனர்.

அப்போது ஆத்திரத்தில் பசவராஜை அவர்கள் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த பசவராஜ், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறாமல், வீட்டிற்கு திரும்பினார். முன்னதாக அவர் குமாரசாமி லே-அவுட் போலீசில் புகார் அளித்தார்.

கோமாவுக்கு சென்றார்...

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் மற்றும் வினோத்தை கைது செய்தனர். இதற்கிடையே பசவராஜ், வழக்கம் போல் மதுக்கடைக்கு வேலைக்கு சென்றார். அங்கு சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஆஸ்பத்திரியில் கோமாவுக்கு சென்றார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் 23 நாட்கள் ஆஸ்பத்திரி சிகிச்சையில் இருந்த பசவராஜ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து குமாரசாமி லே-அவுட் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் அந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர். இதுகுறித்து கைதான 2 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்