பர்தா அணிந்து வாடிக்கையாளர்கள் போல் நகைக்கடையில் தங்க நகைகள் நூதன திருட்டு

பர்தா அணிந்து வாடிக்கையாளர்கள் போல வந்து நகைக்கடையில் தங்க நகைகள் நூதன திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-09-16 18:45 GMT

சிவமொக்கா;

சிவமொக்கா டவுன் காந்தி பஜார் பகுதியில் ஒரு நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்கள், நகைக்கடை உரிமையாளரிடம் தங்க மோதிரம், கம்மல் டிசைன்களை காண்பிக்கும்படி கூறியுள்ளனர்.

அதன்படி அவரும், 2 பெண்களிடம் மோதிரம், கம்மலில் பலவிதமான டிசைன்களை காட்டியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் 2 பெண்களும், உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி தாங்கள் கொண்டு வந்த போலி நகைகளை வைத்துவிட்டு தங்கநகைகளை நைசாக திருடிவிட்டனர்.

இதையடுத்து நகைகளை பார்த்துவிட்டு விலையை கேட்டறிந்து மறுநாள் வந்து வாங்கி கொள்வதாக கூறி திருடிய நகைகளுடன் திரும்பி சென்றுவிட்டனர். இதையடுத்து சிறிதுநேரம் கழித்து உரிமையாளர், நகைகளை சரிபார்த்தபோது மோதிரம், ஒரு ஜோடி கம்மல் காணாமல் போய் இருந்தது. இதையடுத்து அவர், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார்.

அதில் சிலமணிநேரத்திற்கு முன்பு கடைக்கு பர்தா அணிந்து வந்த பெண்கள் போலி நகைகளை வைத்துவிட்டு அதற்கு பதிலாக தங்கநகைகளை நைசாக திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதைப்பார்த்து கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். திருடிய நகைகளின் மதிப்பு ரூ.89 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர், தொட்டபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து பெண்கள் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்