தொழிலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை; கலபுரகி கோர்ட்டு உத்தரவு
தொழிலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கலபுரகி கோர்ட்டு உத்தரவு.
கலபுரகி:
கலபுரகி டவுன் பிரம்மபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சிரஞ்ஜீவி (வயது 29). தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 5 பேர் வந்தனர். அவர்கள் திடீரென பயங்கர ஆயுதங்களால் சிரஞ்ஜீவியை தாக்கினர். மேலும், கத்தியால் அவரது வயிற்றில் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சிரஞ்ஜீவி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து புகாரின்பேரில் பிரம்மபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுநகர் பகுதியை சேர்ந்த ரகுநாத், அவரது மகன் காசிநாத், விஸ்வநாத் உள்பட 5 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கலபுரகி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. மேலும் போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதி, முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்தது உறுதியானதால், காசிநாத் மற்றும் ஜெயா ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.